வாகன ஓட்டிகளிடம் நல்லிணக்கத்துடன் நடந்து கொள்ள வேண்டும்; போலீசாருக்கு, கமல்பந்த் உத்தரவு

விதிமுறைகளை மீறினால் அபராதம் வசூலிக்கும் போது வாகன ஓட்டிகளிடம் நல்லிணக்கத்துடன் நடந்து கொள்ள வேண்டும் என்று போக்குவரத்து போலீசாருக்கு, போலீஸ் கமிஷனர் கமல்பந்த் உத்தரவிட்டுள்ளார்.

Update: 2021-08-15 20:47 GMT
பெங்களூரு:

வாகன ஓட்டிகள் குற்றச்சாட்டு

  பெங்களூரு ராமமூர்த்திநகர் போலீஸ் நிலையத்தில் நடந்த போக்குவரத்து தொடர்பு தினத்தையொட்டி வாகன ஓட்டிகளின் குறைகளை கேட்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில், போலீஸ் கமிஷனர் கமல்பந்த் கலந்து கொண்டு, வாகன ஓட்டிகளின் குறைகள், போக்குவரத்து பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது குறித்து அவர் கேட்டு அறிந்து கொண்டார்.

  அப்போது விதிமுறைகளை மீறும் போது போக்குவரத்து போலீசார் தங்களிடம் அபராதம் வசூலிக்கும் போது கடுமையான வார்த்தைகளை பயன்படுத்தி பேசுவதாக வாகன ஓட்டிகள் குற்றச்சாட்டு கூறினார்கள். இதையடுத்து, போலீஸ் கமிஷனர் கமல்பந்த் பேசியதாவது:-

போலீசாரின் குறிக்கோள் அல்ல

  வாகன ஓட்டிகளுக்கு தொந்தரவு கொடுக்க வேண்டும், விதிமுறைகளை மீறும் வாகன ஓட்டிகளிடம் இருந்து அபராதம் வசூலித்தே தீர வேண்டும் என்பது போக்குவரத்து போலீசாரின் குறிக்கோள் அல்ல. போக்குவரத்து விதிமுறைகள் பற்றி வாகன ஓட்டிகள் அறிந்து கொள்ள வேண்டும், அதுபற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும், விதிமுறைகளை மீறுவதால் ஏற்படும் உயிர் இழப்புகளை தடுப்பதே போலீசாரின் நோக்கமாகும்.

  அபராதம் விதிக்கும் போதும், வாகன ஓட்டிகள் விதிமுறைகளை மீறும் சந்தர்ப்பத்தில் போலீசார் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பது குறித்து போக்குவரத்து போலீசாருக்கு சிறப்பு பயிற்சிகள் அளிக்கப்படுகிறது. இதுபோன்று சந்தர்ப்பத்திலும், போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபடும் போது பொதுமக்கள் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நல்லிணக்கத்துடன் நடந்து கொள்ள...

  அதே நேரத்தில் விதிமுறைகளை மீறும் வாகன ஓட்டிகளிடம் இருந்து அபராதம் வசூலிக்கும் போது, அவர்களுடன் நல்லிணக்கத்துடன் நடந்து கொள்ளும்படியும் போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளது. விபத்துகள் ஏற்படுதை தடுக்க, வாகன ஓட்டிகள் போக்குவரத்து விதிமுறைகளை சரியாக கடைப்பிடிப்பது அவசியமாகும். பெங்களூருவில் நிலவும் போக்குவரத்து நெரிசல் பிரச்சினைகளுக்கு படிப்படியாக தீர்வு காணப்படும்.

  போக்குவரத்து நெரிசல் பிரச்சினை இன்றி வாகனங்கள் செல்வதற்கு, பொதுமக்களின் அவசியமும் போலீசாருக்கு தேவையாக உள்ளது. பொதுமக்கள் ஒத்துழைப்பு இருந்தால் மட்டுமே பாதுகாப்பான பயணம் மேற்கொள்ள முடியும். நகரில் இருசக்கர வாகனங்களை திருடி, நம்பர் பிளேட்டை மாற்றி மா்மநபர்கள் சுற்றி திரிவதால், அவர்களை பிடிக்க வாகன சோதனையில் போக்குவரத்து போலீசார் ஈடுபடுகிறார்கள்.

  இவ்வாறு அவர் பேசினார். இந்த நிகழ்ச்சியில் போக்குவரத்து இணை போலீஸ் கமிஷனர் ரவிகாந்தே கவுடாவும் கலந்து கொண்டு இருந்தார்.

மேலும் செய்திகள்