கார் மீது மரம் முறிந்து விழுந்து பெண் காயம்

விக்கிரமசிங்கபுரம் அருகே கார் மீது மரம் முறிந்து விழுந்ததில் பெண் காயம் அடைந்தார்.

Update: 2021-08-15 20:15 GMT
விக்கிரமசிங்கபுரம்:
விக்கிரமசிங்கபுரம் அருகே கார் மீது மரம் முறிந்து விழுந்து பெண் காயம் அடைந்தார்.

மின்வாரிய ஊழியர்

நெல்லை மாவட்டம் சேர்வலாறு பகுதியைச் சேர்ந்தவர் முருகேசன் (வயது 47). மின்வாரிய ஊழியர். இவருடைய மனைவி காளியம்மாள் (44). 
இவர்கள் 2 பேரும் நேற்று ஒரு காரில் சேர்வலாறில் இருந்து அம்பைக்கு புறப்பட்டனர். காரை ஜெயபிரகாஷ் என்பவர் ஓட்டினார். விக்கிரமசிங்கபுரம் அருகே உள்ள அகஸ்தியர்பட்டி கல்சுண்டு காலனி பகுதியில் கார் சென்று கொண்டு இருந்தது. 

மரம் முறிந்து விழுந்தது

அப்போது, இயற்கை உபாதை கழிப்பதற்காக முருகேசன், ஜெயபிரகாஷ் ஆகியோர் காரை சாலையோரம் நிறுத்தி விட்டு கீழே இறங்கி சென்றனர். இதனால் காளியம்மாள் மட்டும் காரில் இருந்தார். அந்த சமயத்தில் சாலையோரம் நின்றிருந்த பழமையான மருத மரம் ஒன்று திடீரென்று முறிந்து கார் மீதும், சாலையின் குறுக்காகவும் விழுந்தது. இதில் காரின் இடிபாடுகளில் காளியம்மாள் சிக்கினார். 
இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த முருகேசன், ஜெயபிரகாஷ் ஆகியோர் ஓடி வந்து காரில் இருந்த காளியம்மாளை மீட்டனர். அவருக்கு தோள்பட்டையில் லேசான காயம் ஏற்பட்டது. 

போக்குவரத்து பாதிப்பு

இந்த சம்பவம் குறித்து உடனடியாக விக்கிரமசிங்கபுரம் போலீசுக்கும், அம்பை தீயணைப்பு நிலையத்துக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதற்கிடையே அந்த பகுதியில் வாகனங்கள் அணிவகுத்து நின்றதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அந்த வாகனங்கள் அனைத்தும் மாற்றுப்பாதையில் திருப்பிவிடப்பட்டன.  
இதையடுத்து தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து சாலையில் விழுந்த மரத்தை வெட்டி அப்புறப்படுத்தினர். இந்த சம்பவம் குறித்து விக்கிரமசிங்கபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்