கூட்டுறவு சங்கத்தில் கொடியேற்றுவதில் தகராறு. நிர்வாகக்குழு தலைவர் தர்ணா
கூட்டுறவு சங்கத்தில் கொடியேற்றுவதில் தகராறு
ஜோலார்பேட்டை
சுதந்திரதின விழாவை முன்னிட்டு நேற்று ஜோலார்பேட்டை அருகே உள்ள பால்நாங்குப்பம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் நிர்வாகக்குழு தலைவராக இருக்கும் அ.தி.மு.க. ஒன்றிய மகளிர் அணி செயலாளர் சாந்தி கூட்டுறவு கடன் சங்கம் முன்பு தேசியக்கொடி ஏற்ற ஏற்பாடு செய்திருந்தார்.
அப்போது அங்கிருந்த தி.மு.க.வை சேர்ந்த சிலர், சாந்தியை தேசியக்கொடி ஏற்ற விடாமல் தடுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதனால் ஜோலார்பேட்டை கிழக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் உமாகண்ணுரங்கம் என்பவர் அங்கு தேசியக் கொடி ஏற்றினார். இதனால் விரக்தியடைந்த சாந்தி சங்க அலுவலகத்துக்கு வெளியே தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார்.
தகவலறிந்த ஜோலார்பேட்டை போலீசார் அங்கு சென்று தர்ணாவில் ஈடுபட்ட சாந்தியிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியதன் பேரில், அவர் அங்கிருந்து சென்றார். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.