கலெக்டர் அமர்குஷ்வாஹா தேசியக் கொடி ஏற்றினார்

ஜோலார்பேட்டை அருகே ஆயுதப்படை மைதானத்தில் நடந்த சுதந்திரதின விழாவில் மாவட்ட கலெக்டர் அமர் குஷ்வாஹா தேசியக் கொடி ஏற்றிவைத்து, ரூ.1 கோடி மதிப்புள்ள நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

Update: 2021-08-15 17:56 GMT
ஜோலார்பேட்டை
கலெக்டர் கொடியேற்றினார்

திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை அடுத்த பாச்சல் ஊராட்சியில் உள்ள ஆயுதப்படை மைதானத்தில் நேற்று 75-வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. விழாவில் மாவட்ட கலெக்டர் அமர்குஷ்வாஹா தேசியக்கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். னார். இதனையடுத்து போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்று கொண்டார். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிபி சக்கரவர்த்தி உடனிருந்தார். 

தொடர்ந்து அங்கு அமைக்கப்பட்டிருந்த விழிப்புணர்வு கண்காட்சி அரங்குகளை கலெக்டர் மற்றும் அதிகாரிகள் பார்வையிட்டனர். இதையடுத்து கொரோனா பேரிடர் காலத்தில் சிறப்பாக பணியாற்றிய காவல்துறை, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை, ஊரக வளர்ச்சித்துறை, சுகாதாரம் மற்றும் குடும்ப நலம் உள்ளிட்ட 28 துறை சார்ந்த அலுவலர்கள், ஊழியர்கள்  335 பேருக்கு பாராட்டுச் சான்றிதழ்களை கலெக்டர் அமர் குஷ்வாஹா வழங்கினார். 

ரூ.1 கோடி நலத்திட்ட உதவிகள்

மேலும் மாற்றுத் திறனாளிகள் நலத்துறை, தாட்கோ, வேளாண்மைத் துறை, தோட்டக்கலைத்துறை உள்ளிட்ட துறைகளின் சார்பில் 98 பயனாளிகளுக்கு ரூ.1 கோடியே 19 லட்சத்து 56 ஆயிரத்து 827 மதிப்பிலான நலதிட்ட உதவிகளை வழங்கினார். 

பின்னர் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதில் தேச ஒற்றுமை, சிறு குடும்பம் சீரான குடும்பம், வில்லுப்பாட்டு, கொரானா விழிப்புணர்வு, பாரம்பரிய பறை இசை கலை நிகழ்ச்சி உள்ளிட்ட பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. 
விழாவில் மாவட்ட வருவாய் அலுவலர் தங்கையாபாண்டியன், சப்- கலெக்டர் அலர்மேல்மங்கை, எம்.எல்.ஏ.க்கள் க.தேவராஜி (ஜோலார்பேட்டை), நல்லதம்பி (திருப்பத்தூர்) உள்பட துறை அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்