விளாத்திகுளம் அருகே 35 மூட்டைகளில் ரேஷன் அரிசி பறிமுதல்
விளாத்திகுளம் அருகே 35 மூட்டைகளில் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது
விளாத்திகுளம்:
விளாத்திகுளம் அருகே உள்ள கே. சுப்ரமணியபுரம் கிராமத்தில் வீடு வீடாக சென்று ரேஷன் அரிசியை விலைக்கு வாங்கி கடத்தப்படுவதாக வந்த தகவலின் பேரில் வட்ட வழங்கல் அலுவலர் பாலமுருகன் கிராமத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.
அப்போது மினி லாரியில் ரேஷன் அரிசியை ஏற்றிக் கொண்டு மதுரை அவனியாபுரத்தை சேர்ந்த போஸ் உள்ளிட்ட 3 பேர் தப்பி ஓடினர். விளாத்திகுளம் டவுன் வழியாக மதுரை ரோட்டிற்கு சென்று கொண்டிருந்த அந்த மினி லாரியை விளாத்திகுளம் கண்மாய் கரை அருகில் வட்ட வழங்கல் அலுவலர் விரட்டி சென்று நிறுத்தினார். அந்த மினிலாரியில் சோதனை நடத்தியபோது, 40 கிலோ எடை கொண்ட 35 ரேஷன் அரிசி மூட்டைகள் இருந்தன. தப்பி ஓடிய 3 பேரில் ஓட்டுனர் போஸை விளாத்திகுளம் போலீசார் பிடித்தனர். ரேஷன் அரிசி மூட்டைகளுடன் விளாத்திகுளம் போலீஸ் நிலையத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. பின்னர் அவற்றை விளாத்திகுளம் போலீசார், குடிமை ெபாருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர். பிடிபட்ட மினி லாரி ஓட்டுனரிடம் அந்த பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.