பொள்ளாச்சி
ஆனைமலை அருகே உள்ள காளியாபுரத்தை சேர்ந்தவர்கள் கோவிந்தாபுரத்தில் உள்ள கோவிலுக்கு செல்ல முடிவு செய்தனர். இதையடுத்து ஆட்டோவில் 8 பேர் நேற்று கோவிலுக்கு சென்று கொண்டிருந்தனர். அதே பகுதியை சேர்ந்த தங்கமணி (வயது 40) என்பவர் ஆட்டோவை ஓட்டி சென்றார்.
செமனாம்பதி ரோட்டில் ஒரு தனியார் கோழி பண்ணை அருகில் சென்ற போது ஒரு பாம்பு குறுக்கே வந்ததாக தெரிகிறது. இதன் காரணமாக பாம்பு மீது மோதாமல் இருக்க டிரைவர் பிரேக் போட்டார். இதில் கட்டுப்பாட்டை இழந்த ஆட்டோ நிலை தடுமாறி அருகில் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்தது.
இந்த விபத்தில் காளியாபுரத்தை சேர்ந்த நாகேந்திரன் (20), ஆட்டோ டிரைவர் தங்கமணி, கன்னிமுத்து (35), சம்பூர்ணா (58), சரவணன் (26), உத்தமராஜ் (24), அர்ஜூனன் (47), வேலுமணி (37) ஆகிய 8 பேர் படுகாயமடைந்தனர்.
இதையடுத்து அக்கம், பக்கத்தினர் காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக வேட்டைக்காரன்புதூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட பின் சிலர் பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியில் மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
இதுகுறித்து ஆனைமலை போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.