கூட்டணி ஆட்சி கவிழ்ந்ததே பெரிய சந்தோஷம்; ரமேஷ் ஜார்கிகோளி பேட்டி
மந்திரியாகும் ஆசை தனக்கு இல்லை என்றும், கூட்டணி ஆட்சி கவிழ்ந்ததே பெரிய சந்தோஷம் என்றும் ரமேஷ் ஜார்கிகோளி கூறினார்.
பெலகாவி:
மந்திரிசபையில் இடம்
கர்நாடகத்தில் பா.ஜனதா அரசு அமைய காரணமாக இருந்த ரமேஷ் ஜார்கிகோளி, ஆபாச வீடியோ விவகாரத்தில் சிக்கி உள்ளதால் தற்போது முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை மந்திரிசபையில் இடம் கிடைக்கவில்லை. இதுகுறித்து பெலகாவி மாவட்டம் கோகாக்கில் முன்னாள் மந்திரி ரமேஷ் ஜார்கிகோளியிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினார்கள். இதற்கு பதிலளித்து அவர் கூறியதாவது:-
முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தலைமையிலான மந்திரிசபையில் எனக்கு பதவி கிடைக்காதது பற்றி எந்த வித அதிருப்தியும் இல்லை. மந்திரி பதவிக்கு நான் ஆசைப்படவும் இல்லை. எனக்கு மந்திரி பதவி வழங்குவது குறித்து முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை, பா.ஜனதா மேலிட தலைவர்கள் தான் முடிவு செய்ய வேண்டும்.
பா.ஜனதா மேலிடம்...
அவர்கள் எடுக்கும் எந்த முடிவுக்கும் நான் கட்டுப்படுவேன். மாநிலத்தில் காங்கிரஸ், ஜனதாதளம் (எஸ்) கட்சிகளின் கூட்டணி அரசு தொடர்ந்து நீடிக்க கூடாது என பல தரப்பினர் விரும்பினார்கள். நானும் ஆசைப்பட்டேன்.
தற்போது காங்கிரஸ், ஜனதாதளம் (எஸ்) கட்சிகளின் கூட்டணி அரசு கவிழ்ந்து, பா.ஜனதா அரசு அமைந்துள்ளது. கூட்டணி ஆட்சி கவிழ்ந்ததே பெரிய சந்தோஷம். மந்திரி பதவியில் இல்லையென்றாலும், சந்தோஷமாக தான் இருக்கிறேன். லட்சுமண் சவதி, மகேஷ் குமட்டள்ளி, ஸ்ரீமந்த் பட்டீலுக்கு மந்திரி பதவி வழங்காதது பா.ஜனதா மேலிடம் எடுத்த முடிவாகும்.
இவ்வாறு அவர் கூறினார்.