புதுக்கோட்டையில் குடும்ப நல கோர்ட்டு சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி திறந்து வைத்தார்
புதுக்கோட்டையில் குடும்ப நல கோர்ட்டை சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி திறந்து வைத்தார்.
புதுக்கோட்டை:
குடும்ப நல கோர்ட்டு
புதுக்கோட்டையில் ஒருங்கிணைந்த கோர்ட்டில் குடும்ப நல கோர்ட் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. விழாவில் சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு குடும்ப நல கோர்ட்டை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். மேலும் ஒரு வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டதை பார்வையிட்டார். அதன்பின் நடந்த விழாவில் குத்துவிளக்கேற்றி வைத்து அவர் பேசினார். அப்போது அவர் பேசியதாவது:- புதுக்கோட்டைக்கு நான் வந்ததில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். இங்குள்ள பழமையான கோர்ட்டு கட்டிடங்கள் வரலாற்று சிறப்புமிக்கதாக உள்ளது. நான் இந்த கட்டிடங்களை பார்வையிட கிடைத்ததை அதிர்ஷ்டமாக கருதுகிறேன். மக்களை புரிந்து கொள்ள வேண்டுமானால் மொழி மிக அவசியம். ஏழை மக்களுக்கு மரியாதை கொடுக்க வேண்டும்.
நீர்வளம் முக்கியம்
நாட்டின் நீர்வளம் முக்கியமானது. நீர்வளத்தை பாதுகாக்க வேண்டும். நீதி என்பது அனைவருக்கும் முக்கியமானது. கொரோனா தொற்று காலத்தில் மக்கள் பாதிப்படைந்ததோடு, நீதிமன்றங்களும் செயல்படாத நிலை ஏற்பட்டது. கொரோனா தாக்கம் முடிந்தால் தான் இயல்பு நிலைக்கு திரும்ப முடியும். அனைவரும் அரசின் வழிகாட்டு முறைகளை கடைப்பிடித்து வாழ வேண்டும். நீதியையும், அரசியலமைப்பு சட்டத்தையும் மதித்து நடக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
விழாவில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பேசுகையில், ``புதுக்கோட்டை கோர்ட்டு கட்டிடங்கள் பழமையானதாகும். பழமையான வரலாற்று சிறப்பு வாய்ந்த கட்டிடங்களை பாதுகாக்க தமிழக முதல்-அமைச்சர் கூறியுள்ளார். அதன்படி பழமையான கோர்ட்டு கட்டிடங்கள் பாதுகாக்கப்படும். நீதிமன்றங்களையும், நீதிபதிகளையும் மதித்து இந்த அரசு செயல்படுகிறது'' என்றார்.
கூட்டுக்குடும்பமாக வாழ்தல்
ஐகோர்ட்டு நீதிபதி கோவிந்தராஜ் பேசுகையில், ``கணவன்-மனைவி இடையே குடும்ப தகராறு வர காரணம் புரிதல் இல்லாதது தான். கணவன்-மனைவி இருவரும் வேலைக்கு செல்வதால் நமக்கு பொருளாதார சார்பற்ற நிலை வந்துவிடுகிறது. என்னால் எனது வாழ்க்கையை பார்த்துகொள்ள முடியும். உனக்கு ஏன் அடி பணிய வேண்டும் என்ற மனோபாவம் வந்துவிடுகிறது. இது தவறானது. ஒரு குடும்பம் என்றால் தந்தை, தாய், கணவன்-மனைவி, குழந்தைகள் இருக்கும் போது மனஸ்தாபங்கள் வருவது உண்டு. இதில் ஒருவரை புரிந்து கொண்டு ஒன்றாக இருப்போம் என நினைத்துவிட்டால் சண்டை சச்சரவுகள் வராது. குடும்ப நல கோர்ட்டுகள் தேவைப்படாது. நாம் கூட்டுக்குடும்பமாக வாழ வேண்டும். இளம் வழக்கறிஞர்கள் கஷ்டப்பட்டு உழையுங்கள். உங்கள் தகுதியை மேம்படுத்தி கொள்ளுங்கள்'' என்றார்.
நீதிபதிகள்
விழாவில் ஐகோர்ட்டு நீதிபதிகள் கண்ணம்மாள், சுரேஷ்குமார், சதீஷ்குமார், மகிளா கோர்ட்டு நீதிபதி சத்யா, கலெக்டர் கவிதா ராமு, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நிஷா பார்த்திபன் உள்பட மூத்த வழக்கறிஞர்கள், வழக்கறிஞர்கள், வழக்கறிஞர்கள் சங்க நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக மாவட்ட முதன்மை நீதிபதி அப்துல் காதர் வரவேற்று பேசினார். முடிவில் குற்றவியல் முதன்மை நீதிமன்ற நீதிபதி சாந்தி நன்றி கூறினார்.
கீரனூர் சார்பு நீதிமன்றம் திறப்பு
கீரனூர் நீதிமன்ற கட்டிடத்தின் ஒரு பகுதியில் சார்பு நீதிமன்றம் திறப்பு விழா நடைபெற்றது. இதனை சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி திறந்து வைத்து குத்துவிளக்கு ஏற்றினார். தொடர்ந்து கோர்ட்டு வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டது.