கோவில்பட்டி அருகே கட்டிட தொழிலாளி வெட்டிக்கொலை
கோவில்பட்டி அருகே கட்டிட தொழிலாளி வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.
கோவில்பட்டி:
கோவில்பட்டி அருகே உள்ள மேலபாண்டவர்மங்கலம் முதல் தெருவை சேர்ந்தவர் கனகராஜ் (வயது 40). கட்டிட தொழிலாளி. இவர் நேற்று இரவு தனது வீட்டின் முன்பு அமர்ந்து இருந்தார்.
அப்போது அங்கு வந்த ஒரு மர்மகும்பல், அவரிடம் தகராறு செய்து திடீரென அரிவாளால் சரமாரியாக வெட்டியது. உடனே வீட்டுக்குள் இருந்து ஓடி வந்த கனகராஜின் தாயார் பார்வதி (58) அதை தடுக்க முயன்றார். அப்போது அவருக்கும் அரிவாள் வெட்டு விழுந்தது.
பின்னர் அந்த கும்பல் அங்கிருந்து ஓடி விட்டது. அரிவாள் வெட்டில் காயமடைந்த கனகராஜ், பார்வதி ஆகிய இருவரையும் அக்கம்பக்கத்தினர் மீட்டு கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு கனகராஜை பரிசோதனை செய்த டாக்டர், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார். பார்வதியை ஆஸ்பத்திரியில் அனுமதித்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் கோவில்பட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு உதயசூரியன், கோவில்பட்டி மேற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் சபாபதி ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.
இந்த கொலை சம்பவம் குறித்து கோவில்பட்டி மேற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து, கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் மர்ம கும்பலை வலைவீசி தேடி வருகின்றனர். கொலை செய்யப்பட்ட கனகராஜ்க்கு பூலம்மாள் என்ற புஷ்பா (38) என்ற மனைவியும், ரவின் செல்வம் (6) என்ற மகனும் உள்ளனர்.