கணவன்-மனைவியை அரிவாளால் வெட்டிய கிராம உதவியாளர் கைது
தேவகோட்டை அருகே கணவன்-மனைவியை அரிவாளால் வெட்டிய கிராம உதவியாளர் கைது செய்யப்பட்டார்.
தேவகோட்டை,
தேவகோட்டை அருகே கணவன்-மனைவியை அரிவாளால் வெட்டிய கிராம உதவியாளர் கைது செய்யப்பட்டார்.
அபராதம்
தேவகோட்டை அருகே உள்ளது ஆலம்பக்கோட்டை. அந்த கிராமத்தைச் சேர்ந்தவர் துரைப்பாண்டி (வயது35). அவரது மனைவி இந்துமதி (32). துரைபாண்டி கடந்த 2009-ம் ஆண்டு ஆலங்குளம் கண்மாயில் இருந்து மரத்தை வெட்டி கடத்தினார். அப்போது அவர் மீது தாசில்தார் நடவடிக்கை எடுத்து அதற்கு அபராதம் விதித்தார்.
அந்த அபராதத் தொகையை இதுவரை வருவாய் துறையில் துரைபாண்டி செலுத்தவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் நேற்று தேவகோட்டை தாசில்தார் அந்தோணிராஜ் மற்றும் வருவாய்த்துறையினர் ஆலம்பக்கோட்டை கிராமத் திற்கு சென்றனர். அங்கு இருந்த துரைப்பாண்டியிடம் அபராதத் தொகையை உடனடியாக கட்டும்படி கூறினார். அப்போது அதே கிராமத்தைச் சேர்ந்தவரும் என்.மங்கலம் கிராமத்தில் கிராம உதவியாளராக பணிபுரிந்து வரும் அர்ஜுனன் வட்டாட்சியரை பார்த்ததும் அங்கு வந்தார். ஏற்கனவே துரைபாண்டிக்கும் அர்ஜுனனுக்கும் முன்விரோதம் இருந்து வந்தது. இதனால் தாசில்தார் முன்னிலையில் துரைப்பாண்டி அர்ஜுனனை திட்டியிருக்கிறார். பின்னர் தாசில்தார் சென்றுவிட்டார்.
கைது
இந் நிலையில் ஆத்திரம் அடைந்த அர்ஜுனன் அரிவாளை எடுத்து வந்து துரைப்பாண்டி மற்றும் அவரது மனைவி ஆகிய இருவரையும் சரமாரியாக வெட்டினார். இதில் அவர்கள் படுகாயம் அடைந்தனர்.சிகிச்சைக்காக சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இதுகுறித்து திருவேகம்பத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கிராம உதவியாளர் அர்ஜுனனை கைது செய்தனர்.