மடத்துக்குளம் குண்டடம் பொங்கலூரில் பசுமைக்குடில் அமைக்க இலக்கு
மடத்துக்குளம், குண்டடம், பொங்கலூரில் பசுமைக்குடில் அமைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
திருப்பூர்
மடத்துக்குளம், குண்டடம், பொங்கலூரில் பசுமைக்குடில் அமைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
கலெக்டர் ஆய்வு
திருப்பூர் மாவட்டம் குண்டடம் ஊராட்சி ஒன்றியம், காங்கேயம்பாளையம் ஊராட்சியில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை, தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை, வேளாண் பொறியியல் துறை மூலம் விவசாயிகளின் விளை நிலங்களில் செயல்பட்டு வரும் திட்டங்களை கலெக்டர் வினீத் ஆய்வு செய்தார்.
ஆய்வு குறித்து கலெக்டர் கூறியதாவது:-
தேசிய தோட்டக்கலை அபிவிருத்தி இயக்க திட்டத்தின் கீழ் 2020-21-ம் ஆண்டுக்கு, பசுமைக்குடில் அமைக்க 4 ஆயிரம் சதுர மீட்டர் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ரூ.18 லட்சத்து 25 ஆயிரம் நிதி இலக்கும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மடத்துக்குளம், குண்டடம் மற்றும் பொங்கலூர் ஊராட்சி ஒன்றியங்களுக்கு பிரித்து வழங்கப்படுகிறது. குண்டடம் ஊராட்சி ஒன்றியத்துக்கு 2 ஆயிரம் சதுர மீட்டர் வழங்கப்பட்டு ரூ.8 லட்சத்து 90 ஆயிரம் மானியம் வழங்கப்பட்டுள்ளது. அதுபோல் மடத்துக்குளம் வட்டாரத்துக்கு 2 ஆயிரம் சதுர மீட்டருக்கு பயனாளி தேர்வு செய்யப்பட்டுள்ளது. 4 ஆயிரம் சதுர மீட்டருக்கு பயனாளி தேர்வு செய்யும் பணி நடக்கிறது.
ரூ.2 கோடியே 30 லட்சம்
தமிழ்நாடு நீடித்த நிலையான மானாவாரி இயக்கத்தின் கீழ் 11 ஆயிரத்து 300 எக்டருக்கு 16 லட்சம் இலக்கு பெறப்பட்டுள்ளது. தற்போது வரை 751 எக்டர் பரப்புக்கு 405 விவசாயிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். தென்னை வளர்ச்சி வாரிய திட்டத்தின் கீழ் 520 எக்டருக்கு ரூ.2 கோடியே 30 லட்சம் இலக்கு பெறப்பட்டு விவசாயிகள் தேர்வு செய்யப்பட்டு வருகிறார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
குண்டடம் ஊராட்சி ஒன்றியம் காங்கேயம்பாளையம் ஊராட்சியில் விவசாயி விளைநிலத்தில் அமைக்கப்பட்டுள்ள பசுமைக்குடிலை கலெக்டர் ஆய்வு செய்தார். பசுமைக்குடிலில் பயிரிடப்பட்டுள்ள வெள்ளரி சாகுபடிக்கும், திறந்த வெளியில் உள்ள சாகுபடிக்கும் உள்ள வேறுபாட்டை கேட்டறிந்தார். இதில் வேளாண்மை இணை இயக்குனர் மனோகரன், தோட்டக்கலைத்துறை துணை இயக்குனர் பிரேமாவதி உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர்.