திருவண்ணாமலையில் கொரோனா பரவலை தடுக்க கடைகளை மூட வியாபாரிகள் முடிவு

திருவண்ணாமலை நகரில் கொரோனா பரவலை தடுக்க மாலை 5 மணிக்கு கடைகள் மூட வியாபாரிகள் முடிவு செய்துள்ளனர்.

Update: 2021-08-14 16:14 GMT
திருவண்ணாமலை

திருவண்ணாமலை நகரில் கொரோனா பரவலை தடுக்க மாலை 5 மணிக்கு கடைகள் மூட வியாபாரிகள் முடிவு செய்துள்ளனர். 

ஆலோசனை கூட்டம்

திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. எனினும் பாதிப்பு அதிகரித்து வருகிறது. 

இந்த நிலையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவது தொடர்பாக திருவண்ணாமலை நகர அனைத்து வணிகர் சங்கங்களுடன் ஆலோசனை கூட்டம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. 

கூட்டத்துக்கு கலெக்டர் முருகேஷ் தலைமை தாங்கினார். இதில் வணிகர் சங்க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். 

கூட்டத்தில் கொரோனாவை கட்டுப்படுத்துவது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது. அதில் வணிகர்கள் தங்களது கருத்துகளை தெரிவித்தனர். 

வணிகர்கள் சார்பில், முழுமையான கடைகளை அடைக்கக்கூடாது என்றும், நேரக் கட்டுப்பாடு விதிக்க வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டது.

5 மணிக்கு மூடப்படும்

கூட்டத்துக்கு பின்னர் வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் நிருபர்களிடம் கூறுகையில், வரும் நாட்களில் தொற்று அதிகரிக்காமல் இருக்க வணிகர்களின் கருத்துகளை மாவட்ட நிர்வாகம் கேட்டது.

எங்களது சங்க நிர்வாகிகள் ஆலோசனையின்படி வருகிற திங்கட்கிழமை (நாளை) முதல் ஒரு வாரத்துக்கு கடைகளை மாலை 5 மணிக்கு மூடுவது என ஏகமனதாக முடிவு செய்யப்பட்டது. 

வணிகர்களின் ஒத்துழைப்பு மாவட்ட நிர்வாகத்துக்கு இருக்கும். எனவே திருவண்ணாமலை நகரில் உள்ள வணிக நிறுவனங்கள் மாலை 5 மணிக்குள் வியாபாரத்தை முடித்துக்கொள்ளும் என்றனர்.

மாலை 5 மணிக்கு கடைகளை அடைப்பது தொடர்பாக மாவட்ட நிர்வாகம் அதிகாரபூர்வமான அறிவிப்பை வெளியிடவில்லை. 

அதிகாரிகள் தரப்பில் கேட்டபோது, வணிகர்களிடம் கருத்து கேட்கப்பட்டுள்ளது.  அவர்கள் மாலை 5 மணிக்கு கடைகளை அடைக்க முடிவு செய்துள்ளனர். 

இதுகுறித்து அரசுக்கு தெரிவித்து கடைகள் அடைப்பது தொடர்பாக பின்னர் கலெக்டர் தெரிவிப்பார் என்றனர்.

மேலும் செய்திகள்