கிராம நிர்வாக அதிகாரி, உதவியாளர் அதிரடியாக இடமாற்றம்
கிராம நிர்வாக அதிகாரி, உதவியாளர் அதிரடியாக இடமாற்றம்
கோவை
அன்னூரில் விவசாயியின் காலில் விழுந்த சம்பவத்தில் புதிய வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதையடுத்து கிராம நிர்வாக அதிகாரி மற்றும் உதவியாளர் ஆகியோர் அதிரடியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.
அன்னூர் சம்பவம்
கோவை மாவட்டம் அன்னூர் அருகே ஒற்றர்பாளையத்தில் கிராம நிர்வாக அலுவலகம் உள்ளது. இங்கு கிராம நிர்வாக அதிகாரியாக கலைச்செல்வி பணியாற்றினார். கிராம நிர்வாக உதவியாளராக ஏ.டி.காலனியை சேர்ந்தவர் முத்துசாமி (வயது 56) என்பவர் இருந்து வந்தார்.
கடந்த 6-ந் தேதி அன்னூரை அடுத்த கோபிராசிபுரத்தை சேர்ந்த விவசாயி கோபால்சாமி (38) என்பவர் பட்டா பெயர் மாற்றத்துக்காக கிராமநிர்வாக அலுவலகத்துக்கு சென்றார்.
அப்போது ஆவணங்கள் சரியாக இல்லை என்று கிராமநிர்வாக அதிகாரி கலைச்செல்வி கூறியதாக தெரிகிறது.
இதனால் அவர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாகவும், அதை தட்டிக்கேட்ட உதவியாளர் முத்துசாமியை கோபால்சாமி சாதி ரீதியாக திட்டி காலில் விழுந்து மன்னிப்பு கேட்க வைத்ததாகவும் வீடியோ வெளியாகி வைரலானது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
புதிய வீடியோவால் திருப்பம்
இது குறித்து கோவை மாவட்ட கலெக்டர் சமீரன் உத்தரவின்பேரில் சிறப்பு குழு அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. அதன் அடிப்படையில் கோபால்சாமி மீது வழக்குப்பதிவு செய்ய அன்னூர் போலீசார் கலெக்டர் உத்தரவிட்டார்.
அதன்படி கோபால்சாமி மீது வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்பட 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்தநிலையில் விவசாயியின் காலில் கிராம நிர்வாக உதவியாளர் விழுந்த சம்பவம் தொடர்பாக நேற்று புதிய வீடியோ ஒன்று வெளி யானது.
அது இந்த வழக்கில் திருப்பத்தை ஏற்படுத்தியது. மேலும் அந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
விவசாயியை தாக்கும் காட்சி
அந்த புதிய வீடியோவில் கோபால்சாமியை, கிராம நிர்வாக உதவியாளர் முத்துசாமி சரமாரியாக தாக்கும் காட்சிகள் பதிவாகி இருந்தன.
இதற்கிடையே கலெக்டர் ஏற்படுத்திய விசாரணை குழுவுக்கு உண்மையை மறைத்து தவறான தகவலை கொடுத்த முத்துசாமி மற்றும் கிராம நிர்வாக அதிகாரி கலைச்செல்வி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் சங்கம் சார்பில் மேட்டுப்பாளையம் துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து அந்த புதிய வீடியோ மாவட்ட கலெக்டர் சமீரன் பார்வைக்கு கொண்டு செல்லப்பட்டது.
அதில் உண்மைத்தன்மை இருநப்பதை அறிந்த கலெக்டர் சமீரன், கிராம நிர்வாக அதிகாரி கலைச்செல்வி மற்றும் கிராம நிர்வாக உதவியாளர் முத்துசாமி ஆகியோரை பணியிட மாற்றம் செய்து அதிரடி நடவடிக்கை எடுத்தார்.
பணியிட மாற்றம்
அதன்படி கிராம நிர்வாக அதிகாரி கலைச்செல்வி கோவையை அடுத்த பேரூர் அருகே காளாம்பாளையம் கிராம நிர்வாக அலுவலகத் துக்கும், முத்துசாமி அன்னூர் ஆம்போதி ஊராட்சியில் உள்ள கிராம நிர்வாக அலுவலகத்துக்கும் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.