போடிமெட்டு மலைப்பகுதியில் கொழுந்துவிட்டு எரிந்த காட்டுத்தீ
போடிமெட்டு மலைப்பகுதியில் காட்டுத்தீ கொழுந்துவிட்டு எரிந்தது.
போடி:
போடி மெட்டு மலைப்பகுதியில் உள்ள கழுகுமலை வனச்சரகத்திற்கு உட்பட்ட தொடால் வனப்பகுதியில் நேற்று முன்தினம் மதியம் 2 மணி அளவில் காட்டுத்தீ பற்றி எரிந்தது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் வனச்சரகர் நாகராஜ், வனவர் நிதின், வனக்காப்பாளர் பெத்தனசாமி ஆகியோர் தலைமையிலான வன ஊழியர்கள் விரைந்து வந்து தீயை அணைக்க முயற்சி செய்தனர். ஆனால் காற்று காரணமாக தீ மளமளவென பரவி கொழுந்து விட்டு எரிய தொடங்கியது. இதனால் பாறைகளுக்கிடையே இருந்த புற்கள், செடி, கொடிகள், மரங்கள் எரிந்து சாம்பலாகின. மேலும் அருகே இருந்த தனியார் தோட்டங்களிலும் தீ பரவியது. இதையடுத்து வனத்துறையினர் சுமார் 10 மணிநேரம் போராடி தீயை அணைத்தனர். எனினும் சுமார் 2 ஏக்கர் பரப்பளவிலான வனப்பகுதி முற்றிலும் எரிந்து சேதமானது.