இருதரப்பினர் இடையே பிரச்சினை: இறந்த மூதாட்டி உடலுக்கு இறுதிச்சடங்கு செய்ய மறுப்பு
இருதரப்பினர் இடையே ஏற்பட்ட பிரச்சினை காரணமாக இறந்த மூதாட்டி உடலுக்கு இறுதிச்சடங்கு செய்ய மறுக்கப்பட்டதால் பதற்றம் ஏற்பட்டது. இதையடுத்து அதிகாரிகள் சமரசம் செய்தனர்.
காரைக்குடி,
காரைக்குடி அருகே உள்ள கோட்டையூர் பகுதியை சேர்ந்த 68 வயது மூதாட்டி ஒருவர் உடல்நிலை குறைவால் இறந்து போனார். அவரது இறுதிச்சடங்கில் சம்பிரதாய வழிமுறைகளை செய்ய சம்பந்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த நபரை, இறந்தவர் தரப்பினர் அணுகியுள்ளனர். அதற்கு அவர் எங்களது குடியிருப்பு பகுதி ஆக்கிரமிக்கப்பட்ட பகுதி என்று அரசால் அகற்ற படுவதற்கு இறந்த போனவரின் தரப்பினரே காரணம்.
எனவே நாங்கள் யாரும் இறுதி சடங்கில் எங்களுக்கான வேலையை செய்ய மாட்டோம் என மறுத்தனர். இதனால் வெளியூர் நபர்களை இறந்தவர் தரப்பினர் அழைக்க முயன்றபோது, உள்ளூர் நபர்கள் மறுக்கும் பட்சத்தில் நாங்களும் வர இயலாது என கூறிவிட்டனர். இதனால் இது ஒரு பிரச்சினையாக மாறத் தொடங்கியது. இறந்தவர் தரப்பினர், எங்களுக்கு இறுதிச்சடங்குகளுக்கான வேலைகளை செய்ய வராவிட்டால் இந்த ஊரில் வேறு எவருக்கும் வேலை செய்ய விட மாட்டோம் என்று கூறியதோடு இறந்தவர் உடலோடு சாலை மறியல் செய்வோம் என்று கூறி அதற்கான நடவடிக்கைகளில் சிலர் ஈடுபடத் தொடங்கினர். இதனால் பதற்றம் ஏற்பட்டது.
தகவல் அறிந்த தாசில்தார் மாணிக்கவாசகம், காரைக்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு வினோஜி, கோட்டையூர் பேரூராட்சி செயல் அலுவலர் கவிதா, மண்டல துணை தாசில் தார் சுமதி, வருவாய் ஆய்வாளர் ராஜசேகரன், கிராம நிர்வாக அலுவலர் கார்த்திகேயன் ஆகியோர் இரு தரப்பினரையும் கிராம நிர்வாக அலுவலகத்திற்கு வரவழைத்து அங்கு சமாதானக் கூட்டம் நடத்தினர். கூட்டத்தில் ஏற்பட்ட சமரச உடன்படிக்கையின்படி மூதாட்டி இறுதிச்சடங்கில் தாங்கள் செய்ய வேண்டிய காரியங்களைச் செய்ய ஒரு சமூகத்தினர் ஒத்துக்கொண்டனர். அதன்படி இறுதிச்சடஙகில் தாங்கள் ஆற்ற வேண்டிய வேலைக்காக ஒருவரை அனுப்பினர். அதன்பின் அந்த மூதாட்டியின் இறுதிச்சடங்குகள் நடைபெற்று உடல் அடக்கம் செய்யப் பட்டது. இதனால் அங்கு அமைதி நிலவியது.