படப்பை அருகே ஆட்டோவில் கஞ்சா கடத்திய 3 பேர் கைது
படப்பை அருகே ஆட்டோவில் கஞ்சா கடத்திய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
படப்பை,
காஞ்சீபுரம் மாவட்டம் படப்பை அடுத்த வரதராஜபுரம் அருகே உள்ள வண்டலூர்-மீஞ்சூர் வெளிவட்டசாலை சுங்கச்சாவடி அருகே சர்வீஸ் சாலையில் சோமங்கலம் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.
அப்போது தாம்பரம் நோக்கி சென்று கொண்டிருந்த ஒரு ஆட்டோவை நிறுத்தி அதில் இருந்தவர்களிடம் விசாரித்தனர். ஆட்டோவில் இருந்தவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் கூறினார்கள். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் ஆட்டோவை சோதனை செய்தனர். சோதனையில் டிரைவர் சீட்டுக்கு கீழே பிளாஸ்டிக் கவரில் 1½ கிலோ கஞ்சா பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
அதை பறிமுதல் செய்த போலீசார் 3 பேரையும் சோமங்கலம் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அவர் பழைய பெருங்களத்தூர் அன்னை இந்திரா நகர் பகுதியை சேர்ந்த ஜான் லூக் மகினோட் (வயது 35), காமராஜர் தெருவை சேர்ந்த கபிலன் (28), பழைய பெருங்களத்தூர் ரங்கா நகர் பகுதியை சேர்ந்த மோகன் குமார் (28) என்பது தெரியவந்தது. இதையடுத்து 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 1½ கிலோ கஞ்சா மற்றும் ஆட்டோவை பறிமுதல் செய்தனர்.