சினிமா பாணியில் முதல் திருமணத்தை மறைத்து இளம்பெண்ணை காதலித்து ஏமாற்றிய வாலிபர்
இரட்டை பிறவி என்று கூறி சினிமா பாணியில் முதல் திருமணத்தை மறைத்து இளம்பெண்ணை காதலித்து ஏமாற்றிய வாலிபரை போலீசார் தேடி வருகிறார்கள். இதற்காக போலியாக பிறப்பு சான்றிதழ், ஆதார் அட்டையும் தயாரித்து உள்ளார்.
ஆவடி,
சென்னை அரும்பாக்கம் திருவீதி அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் வில்லாண்டர் பென்னட் ராயன். இவர், போரூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இவருக்கு திருமணமாகி மனைவியும், குழந்தையும் உள்ளது. ஆனால் அதை மறைத்து, அதே நிறுவனத்தில் வேலை செய்த ஆவடியை அடுத்த வெள்ளானூர் பகுதியை சேர்ந்த 21 வயது இளம்பெண்ணை தனது காதல் வலையில் சிக்க வைத்தார். இருவரும் காதலித்து வந்தனர்.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் இரு வீட்டார் சம்மதத்துடன் இளம் பெண்ணுக்கும், வில்லாண்டர் பென்னட் ராயனுக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. வில்லாண்டர் பென்னட் ராயனுக்கு ஏற்கனவே திருமணமாகி மனைவி, குழந்தை இருப்பதை அவரது பெற்றோரும் அவருக்கு உடந்தையாக இருந்து பெண் வீட்டாரிடம் சொல்லாமல் மறைத்துவிட்டனர்.
பின்னர் இளம்பெண்ணின் வீட்டிலிருந்து திருமண செலவுக்காக ரூ.3 லட்சத்து 50 ஆயிரத்தை வில்லாண்டர் பென்னட் ராயன் பெற்றுக்கொண்டார். சில நாட்கள் கழித்து அவருக்கு ஏற்கனவே திருமணமாகி மனைவி மற்றும் குழந்தை இருப்பதை அறிந்த பெண் வீட்டார் அதிர்ச்சி அடைந்தனர்.
இதுபற்றி அவரது வீட்டுக்கு சென்று விசாரித்தனர். அப்போது வில்லாண்டர் பென்னட் ராயன், “அது நான் அல்ல. எனது அண்ணன் வின்சென்ட் பென்னட் ராயன். நாங்கள் இரட்டை பிறவிகள். அவருக்கு திருமணம் முடிந்து தற்போது குடும்பத்துடன் துபாயில் வசித்து வருகிறார். நாங்கள் இருவரும் பார்ப்பதற்கு ஒரே மாதிரியாக இருப்போம்” என்று சினிமா பாணியில் பொய் சொன்னார்.
மேலும் இளம்பெண்ணின் குடும்பத்தினரை நம்ப வைக்க, தனது திருமணத்தின்போது மனைவி, தாய் மற்றும் தங்கையுடன் இருக்கும் புகைப்படத்தில் தற்போது வேறு தோற்றத்தில் இருக்கும் தனது புகைப்படத்தை மார்பிங் செய்து, அண்ணன் திருமணத்தின்போது தங்கள் குடும்பத்துடன் தான் இருப்பதாக கூறி மார்பிங் செய்யப்பட்ட புகைப்படத்தை பெண் வீ்ட்டாரிடம் காண்பித்தார்.
அத்துடன் இரட்டைப்பிறவிகள் என்பதற்கு ஆதாரமாக போலியாக தயாரித்த பிறப்பு சான்றிதழ், ஆதார் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை போன்றவற்றையும் காட்டினார்.
ஆனாலும் சந்தேகம் அடைந்த பெண் வீட்டார், தீவிரமாக விசாரணை நடத்தினர். அதில் வில்லாண்டர் பென்னட் ராயனுக்கு ஏற்கனவே திருமணமாகி மனைவி, குழந்தை இருப்பது உறுதியானது.
கொலை மிரட்டல்
இதையடுத்து இளம்பெண், கடந்த ஏப்ரல் மாதம் அரும்பாக்கம் போலீஸ் நிலையத்தில் இதுகுறித்து புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி, இருவீட்டாருடனும் சமாதான பேச்சு நடத்தி, வில்லாண்டர் பென்னட் ராயனிடமிருந்து ரூ.1 லட்சத்தை வாங்கி இளம்பெண்ணிடம் கொடுத்தனர். மீதி பணத்தை விரைவில் கொடுத்து விடுகிறேன் என்று வில்லாண்டர் பென்னட் ராயன் அப்போது கூறினார்.
ஆனால் மீதி பணத்தை கொடுக்காமல் காலம் தாழ்த்தி வந்ததுடன், பணத்தை தரும்படி கேட்ட இளம்பெண்ணுக்கு வில்லாண்டர் பென்னட் ராயன் கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது.
இதனால் அதிர்ச்சியடைந்த இளம்பெண், இதுகுறித்து ஆவடி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் லதா வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள வில்லாண்டர் பென்னட் ராயன் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்து மோசடியில் ஈடுபட்ட அவரது தாயார் செலினா ராயன் ஆகிய இருவரையும் தேடி வருகின்றனர்.