சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கான உடல் தகுதி தேர்வில் "விக்" வைத்து பங்கேற்ற 2 வாலிபர்கள் கைது
பெலகாவியில் சப்-இன்ஸ்பெக்டர்பணிக்கான உடல் தகுதி தேர்வில் விக் வைத்து பங்கேற்ற 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டாா்கள். உயரத்தை அதிகரித்து காட்டுவதற்காக முயன்று போலீசாரிடம் 2 பேரும் சிக்கினர்.
பெலகாவி: பெலகாவியில் சப்-இன்ஸ்பெக்டர்பணிக்கான உடல் தகுதி தேர்வில் விக் வைத்து பங்கேற்ற 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டாா்கள். உயரத்தை அதிகரித்து காட்டுவதற்காக முயன்று போலீசாரிடம் 2 பேரும் சிக்கினர்.
சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு
கர்நாடகத்தில் போலீஸ் துறைக்கு புதியதாக சப்-இன்ஸ்பெக்டர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி, பெலகாவி மாவட்டத்தில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தேர்வுக்காக விண்ணப்பித்திருந்தவர்களுக்கு, நேற்று உடல் தகுதி தேர்வு நடைபெறும் அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி, பெலகாவி புறநகரில் உள்ள கா்நாடக ஆயுதப்படை மைதானத்தில் வைத்து நேற்று காலையில் உடல் தகுதி தேர்வு நடைபெற்றது.
இந்த தேர்வில் கலந்து கொண்டவர்களுக்கு உயரம், மாா்பின் அளவு உள்ளிட்ட உடல் தகுதி தேர்வுகள் நடந்தது. அப்போது தேர்வில் கலந்து கொண்ட 2 வாலிபர்களின் தலை மட்டும் சற்று உயரமாக இருந்ததை போலீஸ் அதிகாரிகள் கண்டுபிடித்தார்கள். இதையடுத்து, 2 வாலிபர்களையும் தனியாக அழைத்து சென்று, அங்குள்ள அறையில் வைத்து சோதனை நடத்தப்பட்டது. அப்போது போலீஸ் அதிகாரிகளே அதிர்ச்சி அடைந்தார்கள்.
விக் வைத்த வாலிபர்கள்
அதாவது 2 வாலிபர்களும் தங்களது தலையில் விக் வைத்திருந்தார்கள். விக் உள்ளே தெர்மாகோலை வைத்து தலையில் மாட்டி இருந்தார்கள். இதன் காரணமாக அவர்களின் உயரம் சற்று அதிகரித்திருந்தது. அவர்கள் 2 பேரும் சப்-இன்ஸ்பெக்டராக தேர்வாக உயரம் குறைவாக இருந்துள்ளனர். இதனால் உடல் தகுதி தேர்வில் தங்களது உயரத்தை அதிகரித்து காட்டுவதற்காக விக் வைத்து, அதற்குள் தெர்மாகோலை வைத்து மோசடியில் ஈடுபட முயன்றது தெரியவந்தது. இதையடுத்து, 2 வாலிபர்களும் கைது செய்யப்பட்டாா்கள்.
விசாரணையில், அவர்கள் பெலகாவி மாவட்டம் சிக்கோடி தாலுகா ஜாகானூரு கிராமத்தை சேர்ந்த பாலேஷ் துரதுண்டி (வயது 27), மூடலகியை சேர்ந்த உமேஷ் (28) என்று தெரிந்தது. அவர்கள் 2 பேர் மீதும் பெலகாவி புறநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பெலகாவியில் நேற்று பரபரப்பை ஏற்படுத்தியது.