ரூ.4½ லட்சம் மோசடி; ஆவணங்களை எரித்த மேலாளர் கைது

பெட்ரோல் விற்பனை நிலையத்தில் ரூ.4½ லட்சம் மோசடி செய்து அந்த ஆவணங்களை தீ வைத்து எரித்த மேலாளர் கைது செய்யப்பட்டார்.

Update: 2021-08-13 21:19 GMT
மதுரை,

பெட்ரோல் விற்பனை நிலையத்தில் ரூ.4½ லட்சம் மோசடி செய்து அந்த ஆவணங்களை தீ வைத்து எரித்த மேலாளர் கைது செய்யப்பட்டார்.

பெட்ரோல் நிலையத்தில் தீ விபத்து

மதுரை எஸ்.எஸ்.காலனி ஜவகர் தெருவை சேர்ந்தவர் ராமலிங்கம் (வயது 70). இவர் மேலவெளிவீதியில் பெட்ரோல் விற்பனை நிலையம் வைத்துள்ளார். அங்கு மேலாளராக ஜெயராமன் என்பவர் வேலை பார்த்து வந்தார். சம்பவத்தன்று பெட்ரோல் நிலைய அலுவலகத்தில் தீ விபத்து ஏற்பட்டது. அதில் அங்கிருந்த ஆவணங்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் எரிந்து நாசமாயின.
உடனே தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அைணத்தனர். இந்த சம்பவம் குறித்து உரிமையாளர் ராமலிங்கம் திடீர்நகர் போலீசில் புகார் அளித்தார். அது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

 மேலாளர் கைது

மேலும் அங்கிருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தனர். அதில் அலுவலக மேலாளர் ஜெயராமன் அங்கிருந்த ஆவணங்கள் மீது பெட்ரோலை தெளித்து தீ வைத்தது தெரியவந்தது. உடனே போலீசார் ஜெயராமனை பிடித்து விசாரித்தனர். அதில் வேலை பார்க்கும் இடத்தில் இருந்து அவர் ரூ.4½ லட்சம் மோசடி செய்ததை உரிமையாளர் கண்டுபிடித்து சத்தம் போட்டுள்ளார்.
மேலும் அந்த பணத்தை வசூலிக்க அவரை மீண்டும் கம்பெனியில் சேர்த்துள்ளார். இந்த நிலையில் ஜெயராமன் தனக்கு எதிராக உள்ள ஆவணங்கள் உரிமையாளர் கையில் கிடைக்காமல் இருப்பதற்காக அதன் மீது தீ வைத்து எரித்தது தெரியவந்தது. அதை தொடர்ந்து போலீசார் அவரை கைது செய்தனர்.

மேலும் செய்திகள்