மாந்திரீகம் செய்வதாக கூறி பெண்ணிடம் ரூ.2¾ லட்சம் பறிப்பு
சதுரங்க வேட்டை சினிமா பாணியில் மாந்திரீகம் செய்வதாக கூறி பெண்ணிடம் ரூ.2¾ லட்சம் பறித்த நபரை போலீசார் கைது செய்தனர். மேலும் 2 பேரை வலைவீசி தேடி வருகிறார்கள்.
கெங்கவல்லி, ஆக.14-
சதுரங்க வேட்டை சினிமா பாணியில் மாந்திரீகம் செய்வதாக கூறி பெண்ணிடம் ரூ.2¾ லட்சம் பறித்த நபரை போலீசார் கைது செய்தனர். மேலும் 2 பேரை வலைவீசி தேடி வருகிறார்கள்.
மாந்திரீகம்
கெங்கவல்லி அருகே ஒதியத்தூர் தெற்கு தெரு பகுதியை சேர்ந்தவர் நிர்மலா (வயது 40). இவருடைய கணவர் ராமர் என்கிற செல்வம். இவர் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இவருடைய மகன் பிரவீன். இவர் கப்பல்துறை வேலைக்கு படித்து வருகிறார்.
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அவருடைய வீட்டுக்கு 3 பேர் கொண்ட கும்பல் வந்தது. அவர்கள் நாங்கள் மாந்திரீகம் செய்து வருகிறோம். உங்களது வீட்டில் பெரிய கண்டம் உள்ளது. அதனை போக்குவதற்கு மாந்திரீகம் செய்ய வேண்டும். யாகம் நடத்த வேண்டும். இல்ைலயெனில் ஒரு உயிர் பறிபோகும் என்று கூறி உள்ளனர். இதை கேட்ட நிர்மலா அச்சம் அடைந்தார்.
போலீசில் ஒப்படைப்பு
மேலும் அவர்கள் இதற்கு ரூ.7 லட்சம் செலவாகும் என்று தெரிவித்தனர். அதற்கு நிர்மலா அவ்வளவு தொகை தன்னிடம் இல்லை என்று கூறி உள்ளார். மேலும் அவர்கள் மாந்திரீகம் கண்டிப்பாக செய்ய வேண்டும் உங்களிடம் உள்ள பணத்தை கொடுங்கள் என்று தெரிவித்தார். அதற்கு நிர்மலா ரூ.13 ஆயிரத்தை முதலில் கொடுத்தார். பின்னர் ரூ.2 லட்சமும், ரூ.67 ஆயிரமும் 2 தவணையாக கொடுத்துள்ளார்.
இந்த நிலையில் நேற்று அந்த கும்பலை சேர்ந்த ஒருவர் நிர்மலாவுக்கு போன் செய்து, ரூ.60 ஆயிரம் பணத்தை எடுத்து வர கூறி உள்ளார். இதனால் சந்தேகம் அடைந்த அவர், இது குறித்து தனது உறவினர்களிடம் தெரிவித்தார். அவர்கள் ஆத்தூர் பஸ் நிலையத்தில் இருந்த அந்த நபரை மடக்கி பிடித்து கெங்கவல்லி போலீசில் ஒப்படைத்தனர்.
சதுரங்க வேட்டை
போலீசார் அந்த நபரிடம் விசாரணை நடத்திய போது, அவர் திருச்சி அருகே உள்ள துறையூர் மங்கலத்தை சேர்ந்த நாடிமுத்து (38) என்பதும், இவர் மந்திரவாதி என்பதும் தெரியவந்தது. மேலும் அவர் சதுரங்க வேட்டை என்ற சினிமா படத்தில் வருவது போன்று மக்களின் ஆசையை தூண்டியும், மாந்திரீகம் என்ற பெயரில் ஏமாற்றியும் பணம் பறித்து வந்ததுடன், ஜோதிடமும் பார்த்து வந்ததாக போலீசார் தெரிவித்தனர். தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, நிர்மலாவிடம் ரூ.2¾ லட்சத்தை அபேஸ் செய்த நாடிமுத்துவை கைது செய்தனர். மேலும் இதில் தொடர்புடைய 2 பேரை வலைவீசி தேடி வருகிறார்கள்.
பொதுமக்கள் யாரும் இதே போல மாந்திரீகம் என்று சொல்லி வருபவர்களிடம் ஏமாற வேண்டாம் என்று போலீஸ் துணை சூப்பிரண்டு இம்மானுவேல் ஞானசேகரன் தெரிவித்துள்ளார்.