பக்தர்கள் இல்லாமல் நடந்த ஆடி கடைசி வெள்ளி பூஜை

அம்மன் கோவில்களில் பக்தர்கள் இல்லாமல் ஆடி கடைசி வெள்ளி பூஜை நடைபெற்றது.

Update: 2021-08-13 20:08 GMT
சிவகாசி, 
அம்மன் கோவில்களில் பக்தர்கள் இல்லாமல் ஆடி கடைசி வெள்ளி பூஜை நடைபெற்றது. 
சிறப்பு தரிசனம் 
கொரோனா பரவல் காரணமாக விருதுநகர் மாவட்டம் முழுவதும் உள்ள முக்கிய கோவில்களில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் பக்தர்களின் வருகை அதிகமாக இருக்கும் என்பதால் தற்போது வாரத்தின் கடைசி 3 நாட்கள் இந்த விதிமுறை பின்பற்றப்படுகிறது. 
 வழக்கமாக ஆடி மாதம் வரும் ஒவ்வொரு செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் அம்மன் கோவில்களில் சிறப்பு தரிசனத்துக்கு ஏற்பாடு செய்யப்படும். பக்தர்கள் தங்களது குடும்பத்துடன் வந்து நேர்த்திக்கடன் செலுத்துவது வழக்கம். இந்த நிலையில் மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவின் பேரில் நேற்று மாவட்டம் முழுவதும் உள்ள பெரிய கோவில்கள் திறக்கப்பட வில்லை. 
சிறப்பு பூஜை 
இதனால் பக்தர்கள் தங்கள் பகுதியில் உள்ள கோவில்களின் வெளியே நின்றவாறு சாமி தரிசனம் செய்தனர்.
 சிவகாசி பகுதியில் பெரும்பாலான கோவில்களில் மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவு கடுமையாக பின்பற்றப்பட்டது. ஒரு சில இடங்களில் சின்ன கோவில் களில் மட்டும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். மாவட்டம் முழுவதும் உள்ள பெரிய அம்மன்கோவில்களில் பக்தர்கள் இன்றி ஆடி வெள்ளி சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது.
ஆலங்குளம் 
ஆலங்குளம் அருகே உள்ள மேலாண்மறைநாடு செல்லியாரம்மன் கோவிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை சென்னையில் வாழும் மேலாண்மறைநாடு கிராமத்தை சேர்ந்த முத்துராஜ், ஜெயலட்சுமி குடும்பத்தினர் செய்திருந்தனர்.
வத்திராயிருப்பு முத்தாலம்மன், தாணிப்பாறை விலக்கில் அமைந்துள்ள அம்மச்சியாரம்மன் உள்பட பல்வேறு அம்மன் கோவில்களில் பக்தர்கள் இன்றி ஆடி வெள்ளி விழா நடைபெற்றது.
சாத்தூரில் முக்குராந்தலில் உள்ள மாரியம்மன், ஒ. மேட்டுப்பட்டி காளியம்மன் கோவில், நாடார் கீழத் தெருவில் உள்ள மாரியம்மன் கோவில், படந்தால் பாதாள துர்க்கை அம்மன் கோவில், பைபாஸ் ரோட்டில் உள்ள காமாட்சி அம்மன் கோவிலும் சிறப்பு வழிபாடு நடந்தது.  

மேலும் செய்திகள்