ரெயில் முன் பாய்ந்து மினிபஸ் கண்டக்டர் தற்கொலை
இரணியல் அருகே மினிபஸ் கண்டக்டர் ரெயில் முன்பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.
நாகர்கோவில்:
இரணியல் அருகே மினிபஸ் கண்டக்டர் ரெயில் முன்பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்த விவரம் வருமாறு:-
தண்டவாளத்தில் பிணம்
இரணியல் அருகே வள்ளியாற்று ரெயில்வே பாலம் தண்டவாளத்தில் நேற்று முன்தினம் இரவு காயங்களுடன் ஒரு வாலிபரின் பிணம் கிடந்தது. இதுகுறித்து அந்த பகுதி பொதுமக்கள் நாகர்கோவில் ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் விஜயகுமார், குமார் ராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். முதலில் பிணமாக கிடந்தவர் யார்? என்ற விவரம் தெரியவில்லை.
மினி பஸ் கண்டக்டர்
தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில், இறந்தவர் கொற்றிகோடு சரல்விளையை சேர்ந்த காட்வின்ஜோஸ் (வயது 27), மினிபஸ் கண்டக்டர் என்பது தெரியவந்தது. இவருக்கு திருமணமாகவில்லை.
காட்வின்ஜோஸ் வீட்டை விட்டு வெளியேறி, தனியாக வாடகை வீட்டில் வசித்து வந்தார். மேலும் அவருக்கு மது பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அவர் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்திருக்கலாம் என போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. தற்கொலைக்கான காரணம் தெரியவில்லை.
இதுகுறித்து ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.