விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு
சுதந்திர தின விழாவையொட்டி விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
விழுப்புரம்,
நாட்டின் 75-வது சுதந்திர தின விழா நாளை (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்பட உள்ளது. விழுப்புரத்தில் உள்ள மாவட்ட பெருந்திட்ட வளாகத்தில் உள்ள காவல்துறை அணிவகுப்பு மைதானத்தில் நடைபெறும் சுதந்திர தின விழாவில் மாவட்ட கலெக்டர் டி.மோகன் கலந்துகொண்டு, தேசியக்கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்துகிறார். பின்னர் காவல்துறையினரின் அணிவகுப்பை பார்வையிடுகிறார்.
விழாவையொட்டி எந்தவித அசம்பாவித சம்பவங்களும் நடைபெறாமல் இருக்க மாவட்டம் முழுவதும் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா உத்தரவின்பேரில் போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். விழுப்புரம் நான்குமுனை சந்திப்பு, காந்தி சிலை, சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலை உள்பட நகரின் பல்வேறு இடங்களில் இரவு, பகலாக தீவிர வாகன சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
பஸ், ரெயில் நிலையங்களில் சோதனை
மேலும் அரசு அலுவலகங்கள், நீதிமன்றங்கள் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் முக்கியமான சாலைகள், மார்க்கெட்டுகள், கடைவீதிகளில் ஏராளமான போலீசார் தீவிரமாக ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். விழுப்புரம் வழியாக கேரளா, கர்நாடகா, புதுச்சேரி உள்பட வெளிமாநிலங்களுக்கும் மற்றும் பல்வேறு வெளிமாவட்டங்களுக்கு செல்லும் அனைத்து வாகனங்களையும் தீவிரமாக சோதனை செய்து வருகின்றனர். அதுபோல் மாவட்டத்தில் உள்ள வழிபாட்டு தலங்கள் அனைத்திற்கும் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். விழுப்புரம் புதிய பஸ் நிலையத்தில் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயசங்கர் தலைமையில் வெடிகுண்டுகளை கண்டறியும் சிறப்பு பிரிவு போலீசார் மெட்டல் டிடெக்டர் கருவியின் மூலமும், மோப்ப நாய் உதவியுடனும் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். இதேபோல் விழுப்புரம் ரெயில் நிலையத்தில் ரெயில்வே போலீசாரும், ரெயில்வே பாதுகாப்பு படை போலீசாரும் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். பயணிகள் கொண்டு வரும் உடைமைகள் கடும் சோதனை செய்யப்பட்ட பின்னரே ரெயில் நிலையத்திற்குள் கொண்டு செல்ல அனுமதிக்கப்படுகிறது. அதுமட்டுமின்றி ரெயில் நிலைய நுழைவு வாயில் அருகில் மெட்டல் டிடெக்டர் கருவியின் உதவியுடன் போலீசார் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.
தண்டவாளங்கள் கண்காணிப்பு
மேலும் போலீஸ் மோப்ப நாய் உதவியுடனும் ரெயில் நிலைய பகுதி முழுவதும் தீவிர வெடிகுண்டு சோதனை நடத்தி வருகின்றனர். இதுதவிர ரெயில் நிலையத்திற்குள் வரும் அனைத்து ரெயில்களிலும் ஒவ்வொரு பெட்டியாக சென்று போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அதுமட்டுமின்றி ரெயில்வே தண்டவாளங்களையும் கண்காணிக்கும் பணி நடந்து வருகிறது. மொத்தத்தில் விழுப்புரம் மாவட்டம் முழுவதும் ஏராளமான போலீசார் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். சந்தேக நபர்களின் நடமாட்டம் குறித்தும் கண்காணித்து வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி
அதேபோல் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளக்குறிச்சி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் விழா நடைபெறுகிறது. இதில் மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் கலந்து கொண்டு தேசிய கொடியை ஏற்றி வைக்கிறார்.
இதையொட்டி நாசவேலை தடுப்பு பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் பிரபாகரன், அசோக்குமார், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் சீனிவாசன், தண்டபானி ஆகியோரை கொண்ட குழுவினர் கள்ளக்குறிச்சியில் சுதந்திர தின விழா நடைபெறும் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகம், மைதானம் மற்றும் விழா மேடை அமைக்கும் இடம் மற்றும் பஸ் நிலையம் ஆகிய இடங்களில் வெடிகுண்டுகளை கண்டு பிடிக்கும் கருவிகள் மூலம் சோதனை மேற்கொண்டனர்.
சுதந்திர தினத்தன்று அசம்பாவித சம்பவங்கள் ஏதும் நடைபெறாமல் இருக்க போலீஸ் சூப்பிரண்டு ஜியவுல்ஹக் உத்தரவின்பேரில் மாவட்டம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.