வன விலங்குகளை வேட்டையாட முயன்ற முன்னாள் போலீஸ்காரர் கைது.நாட்டு துப்பாக்கி, செம்மர கட்டைகள் பறிமுதல்.

பேரணாம்பட்டு அருகே வன விலங்குகளை வேட்டையாட முயன்ற முன்னாள் போலீஸ்காரர் கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து நாட்டு துப்பாக்கி, தோட்டத்தில் பதுக்கி் வைத்திருந்த செம்மர கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டது.

Update: 2021-08-13 17:41 GMT
பேரணாம்பட்டு

பணிநீக்கம் செய்யப்பட்டவர்

பேரணாம்பட்டு அருகே உள்ள செர்லபல்லி கிராமத்தை சேர்ந்தவர் சசிதரன் (வயது 45). தமிழக சிறப்பு காவல் படை போலீஸ்காரராக சென்னையில் பணி புரிந்து வந்த இவர் கடந்த 2004-ம் ஆண்டு சென்னை போலீஸ் டி.ஐ.ஜி. அலுவலக பணம் ரூ.6 லட்சத்தை கையாடல் செய்தது கண்டு பிடிக்கப்பட்டு பணி நீக்கம் செய்யப்பட்டார். இது தொடர்பாக சென்னை பூந்தமல்லி கோர்ட்டில் வழக்கு விசாரணை நடை பெற்று வருகிறது. 

கடந்த 2005-ம் ஆண்டு பேரணாம்பட்டு அருகே இளம்பெண் ஒருவரை தொடர்ந்து மிரட்டி வந்தது தொடர்பாக பேரணாம்பட்டு போலீசார் பெண் வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். 2008-ம் ஆண்டு ஆந்திர மாநிலம் பலமநேர் பகுதியில் ஆள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டார். இதுபோன்று இவர் பல வழக்குகளில் சிறை சென்றவர் ஆவார்.

 வன விலங்குகளை...

இந்த நிலையில் முன்னாள் போலீஸ்காரர் சசிதரன் பேரணாம்பட்டு பகுதியில் தொடர்ந்து சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு வருவதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வகுமாருக்கு தகவல் கிடைத்தது. அவரை கண்காணித்து நடவடிக்கை எடுக்குமாறு பேரணாம்பட்டு போலீசாருக்கு போலீஸ் சூப்பிரண்டு உத்தரவிட்டார்.

அதன்பேரில் பேரணாம்பட்டு போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜன் பாபு தலைமையில் போலீசார்  கண்காணித்தபோது செர்லப்பல்லி கிராமத்தில் ஏரிக்கானாறு பகுதியில் முன்னாள் போலீஸ்காரர் சசிதரன் நாட்டு துப்பாக்கியுடன் வன விலங்குகளை வேட்டையாட முயன்றதை கண்டுபிடித்து அவரை கையும் களவுமாக பிடித்து விசாரணை நடத்தினர்.

நாட்டு துப்பாக்கியுடன் கைது

விசாரணையில் சசிதரன் உரிமம் இல்லாத நாட்டு துப்பாக்கியை அருகிலுள்ள பெரிய பள்ளம் கிராமத்தை சேர்ந்த ஒருவரிடமிருந்து விலைக்கு வாங்கி வன விலங்குகளை வேட்டையாடி வந்தது தெரியவந்தது.

அதைத் தொடர்ந்து போலீசார் அவரது வீட்டை சோதனையிட்டதில் வீட்டருகே நிலத்தில் உள்ள ஆட்டு கொட்டகையில் ரூ.35 ஆயிரம் மதிப்புள்ள 68 கிலோ செம்மரக்கட்டைகளை மறைத்து வைத்திருந்தததை போலீசார் கண்டு பிடித்து பறிமுதல் செய்தனர்.

இது தொடர்பாக முன்னாள் போலீஸ்காரர் சசிதரன்  மீது இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து, சசிதரனை கைது செய்து குடியாத்தம் மாஜிஸ்திரேட்டு முன்பு ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

மேலும் செய்திகள்