சிதம்பரம் அருகே ஓடும் பஸ்சில் நூதன முறையில் பெண்ணிடம் நகை திருடிய 2 போ் கைது

சிதம்பரம் அருகே ஓடும் பஸ்சில் நூதன முறையில் பெண்ணிடம் நகை திருடிய 2 போ் கைது செய்யப்பட்டனா்.

Update: 2021-08-13 17:14 GMT
அண்ணாமலைநகர், 
சிதம்பரம் அருகே உள்ள பள்ளிப்படை எம்.ஐ. நகர் முத்து மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சவுகத் அலி (வயது 27). தனியார் பள்ளி ஆசிரியரான இவர் நேற்று முன்தினம் மாலை தனது மனைவி ஆயிஷா மற்றும் குழந்தையுடன் சிதம்பரத்தில் இருந்து மயிலாடுதுறைக்கு செல்லும் தனியார் பஸ்சில் ஏறி பயணம் செய்தார். வேளக்குடி பஸ் நிறுத்தம் அருகே சென்றபோது, பஸ்சில் பயணம் செய்த 2 பெண்கள் திடீரென தங்களிடம் இருந்த சில்லரை காசுகளை கீழே போட்டனர். 

அப்போது அருகில் இருந்த சவுகத் அலி அந்த பெண்களுக்கு சில்லரைகளை எடுத்து கொடுக்க உதவி புரிந்துள்ளார். வேளக்குடி பேருந்து நிறுத்தத்தில் பஸ் நின்றதும், அந்த இரு பெண்களும் அவசர, அவசரமாக பஸ்சில் இருந்து கீழே இறங்கி வேகமாக நடந்து சென்றனர். இதனால் சந்தேகமடைந்த சவுகத் அலி, தனது மனைவி வைத்திருந்த பையை பார்த்த பொழுது அதில் 2 பவுன் நகைகள் வைத்திருந்த சிறிய பையை காணாமல் போயிருந்தது தெரிய வந்தது. உடனடியாக பஸ்சை நிறுத்தச்சொல்லிய சவுகத் அலி, அக்கம்பக்கத்தினர் உதவியுடன் அந்த 2 பெண்களையும் பிடித்து சோதனை செய்தார். அப்போது அவர்களிடம் நகை வைத்திருந்த பை இருந்தது. 

இதையடுத்து இருவரும் அண்ணாமலை நகர் போலீசில் ஒப்படைக்கப்பட்டனர். போலீசார் நடத்திய விசாரணையில் அவர்கள் சேலம் மாவட்டம் அயோத்தியாபட்டினம் பகுதியை சேர்ந்த காயத்ரி (34), அகிலா (28) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் இருவரையும் கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்த நகைப்பையை மீட்டனர்.

மேலும் செய்திகள்