கன்டெய்னர் லாரியில் கடத்திய ரூ.15 லட்சம் புகையிலை பொருட்கள் பறிமுதல்
வேடசந்தூர் அருகே கன்டெய்னர் லாரியில் கடத்தப்பட்ட ரூ.15 லட்சம் மதிப்பிலான புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
திண்டுக்கல்:
கன்டெய்னர் லாரி
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் வழியாக கன்டெய்னர் லாரியில் புகையிலை பொருட்கள் கடத்தப்படுவதாக, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அவரது உத்தரவின் பேரில், தனிப்படை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் சேக்தாவூத், மாரிமுத்து மற்றும் போலீசார் நேற்று வேடசந்தூர் அருகே கரூர்-திண்டுக்கல் 4 வழிச்சாலையில் விட்டல்நாயக்கன்பட்டி பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக சந்தேகப்படும் வகையில் வந்த கன்டெய்னர் லாரியை போலீசார் நிறுத்தினர். அதை ஓட்டிவந்த டிரைவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.
புகையிலை பொருட்கள்
விசாரணையில் அவர் கிருஷ்ணகிரியை சேர்ந்த சிவக்குமார் (வயது 38) என்றும், பெங்களூருவில் இருந்து கேரள மாநிலம் கோட்டயத்துக்கு துணி பண்டல்களை லாரியில் ஏற்றி செல்வதாகவும் தெரிவித்தார்.
இருப்பினும் அவரது நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த போலீசார், சிவக்குமார் வைத்திருந்த செல்போன் வாட்ஸ்-அப் பதிவுகளை பார்த்தனர். அதில் திண்டுக்கல் பேகம்பூர் என்ற ‘கூகுள் மேப்’ மற்றொரு செல்போனில் இருந்து வந்திருந்தது.
இதனையடுத்து போலீசார் அந்த கன்டெய்னர் லாரியை திறந்து சோதனை செய்தனர். அதில் பர்னிச்சர் பொருட்களுடன் காட்டன் துணி பண்டல்கள் இருந்தன. அதில் சில பண்டல்களை போலீசார் பிரித்து பார்த்தனர்.
அப்போது, உள்ளே மூட்டை, மூட்டையாகவும், பெட்டி பெட்டியாகவும் போதை பாக்கு, குட்கா, பான்மசாலா உள்ளிட்ட புகையிலை பொருட்கள் இருப்பதை கண்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.
ரூ.15 லட்சம் மதிப்பு
பின்னர் போலீசார், அந்த கன்டெய்னர் லாரியை வேடசந்தூர் போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றனர். அங்கு லாரி முழுவதும் சோதனை நடத்தப்பட்டது.
அப்போது அந்த லாரியில் சுமார் 1,000 கிலோ புகையிலை பொருட்கள் கடத்தி வரப்பட்டது தெரியவந்தது. அவற்றின் மதிப்பு ரூ.15 லட்சம் என்று கருதப்படுகிறது. இதையடுத்து அந்த புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
இதற்கிடையே லாரி டிரைவருக்கு ‘கூகுள் மேப்’ அனுப்பியவர்கள், திண்டுக்கல்லில் வத்தலக்குண்டு பைபாஸ் சாலையில் நிற்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் அங்கு விரைந்து சென்றனர்.
4 பேரிடம் விசாரணை
அப்போது, அங்கு 3 பேர் சாலையில், காருடன் சந்தேகப்படும் வகையில் நின்று கொண்டிருந்தனர். உடனே போலீசார் அந்த 3 பேரையும் மடக்கி பிடித்து விசாரணை நடத்தனர்.
விசாரணையில் அவர்கள் சேலத்தை சேர்ந்த சிக்கந்தர் (30), ரபீக் (42), திண்டுக்கல் பேகம்பூரை சேர்ந்த வியாபாரி கணவாய் சாதிக்அலி (34) என்பதும், கன்டெய்னர் லாரி டிரைவருக்கு கூகுள் மேப் அனுப்பியதும் தெரியவந்தது.
இதையடுத்து அவர்கள் 3 பேரும் காருடன் வேடசந்தூர் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டனர். அங்கு பிடிபட்ட லாரி டிரைவர் உள்பட 4 பேரிடமும் வேடசந்தூர் போலீஸ் துணை சூப்பிரண்டு மகேஷ் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தினர்.
4 பேர் கைது
திண்டுக்கல் பேகம்பூரை சேர்ந்த கணவாய் சாதிக்அலி கேட்டதன்பேரில் அவருக்காக சிக்கந்தர், ரபீக் ஆகியோர் சேலத்தில் இருந்து கன்டெய்னர் லாரியில் புகையிலை பொருட்களை கடத்தினர்.
அப்போது லாரியை சிவக்குமார் ஓட்ட, அவருக்கு வழிகாட்டியாக லாரிக்கு முன்பு சிக்கந்தரும், ரபீக்கும் காரில் வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவர்களிடம் இருந்து கன்டெய்னர் லாரி, கார் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.
மேலும் இதுதொடர்பாக சிக்கந்தர், ரபீக், கணவாய் சாதிக் அலி, சிவக்குமார் ஆகிய 4 பேர் மீது வேடசந்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்தனர்.
திண்டுக்கல்லில் நேற்று முன்தினம் ரெயிலில் ரூ.10 லட்சம் புகையிலை பொருட்கள் கடத்தப்பட்ட நிலையில், நேற்று கன்டெய்னர் லாரியில் ரூ.15 லட்சம் புகையிலை பொருட்கள் கடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.