சென்னை மாநகராட்சி பகுதியை சர்வதேச நகரங்களுக்கு இணையாக அழகுப்படுத்த திட்டம்

சென்னை மாநகராட்சி பகுதிகள் சர்வதேச நகரங்களுக்கு இணையாக அழகுப்படுத்துவது தொடர்பாக மாநகராட்சி, மெட்ரோ ரெயில் மற்றும் நெடுஞ்சாலைத்துறை ஆகிய 3 துறைகளை சேர்ந்த அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர்.

Update: 2021-08-13 08:26 GMT
சென்னை,

சென்னையில் பல்வேறு வளர்ச்சி பணிகளை மேற்கொள்ளவும், மாநகரை தூய்மையுடன் பராமரித்து அழகுப்படுத்தவும் முதல்-அமைச்சர் உத்தரவிட்டுள்ளார். அதனடிப்படையில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு இத்திட்டத்தினை செயல்படுத்த பல்வேறு ஆலோசனைகளை வழங்கியுள்ளார்.

அதன்படி சென்னை மெட்ரோ ரெயில், மாநில நெடுஞ்சாலைத்துறை மற்றும் மாநகராட்சி அலுவலர்களுடனான ஆலோசனைக்கூட்டம் சென்னை மெட்ரோ ரெயில் நிறுவன மேலாண்மை இயக்குனர் பிரதீப் யாதவ், அரசு முதன்மை செயலாளரும் பெருநகர சென்னை மாநகராட்சி கமிஷனருமான ககன்தீப்சிங் பேடி ஆகியோர் தலைமையில் நேற்று ரிப்பன் கட்டிட வளாகத்தில் நடைபெற்றது.

சென்னை மாநகராட்சியுடன் 42 உள்ளாட்சி அமைப்புகளை இணைத்து மாநகர எல்லைகள் விரிவாக்கம் செய்யப்பட்டு 426 சதுர கிலோ மீட்டர் பரப்பளவுள்ள பெருநகர சென்னை மாநகராட்சியாக விரிவுபடுத்தப்பட்டுள்ளது. விரிவாக்கம் செய்யப்பட்ட பகுதிகள் உள்பட மாநகரின் பல்வேறு பகுதிகளில் உட்கட்டமைப்புகளை நவீன தொழில்நுட்பத்துடன் சர்வதேச தரத்துக்கு உயர்த்திடும் வகையிலும் பல்வேறு திட்டங்களை செயல்படுத்த முதல்-அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

அதனடிப்படையில் சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள மெட்ரோ ரெயில் பாலங்கள், மாநில நெடுஞ்சாலைகள், மாநகராட்சி பாலங்கள், சாலைகள் மற்றும் பூங்காக்கள் ஆகியவற்றை அழகுப்படுத்த பல்வேறு விதமான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளன. சென்னை மாநகரின் முக்கிய பகுதிகளான விமான நிலையம் முதல் கத்திப்பாரா சந்திப்பு வரை, கோயம்பேடு மேம்பாலம், அண்ணா மேம்பாலம், மெரினா கடற்கரை, மெட்ரோ ரெயில் நிலைய தூண்கள், திருமங்கலம் மேம்பாலம் உள்பட மாநகரின் பல்வேறு பகுதிகளில் சர்வதேச நகரங்களுக்கு இணையாக அழகுப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.

வண்ண ஓவியங்கள் வரைதல், மரம், செடிகளை நட்டு பசுமையாக பராமரித்தல், வண்ண ஒளிரும் விளக்குகளால் அழகுப்படுத்துதல், முக்கியச் சந்திப்புகளில் செயற்கை நீரூற்றுகளை உருவாக்குதல் போன்ற பணிகளை மேற்கொள்ள சென்னை மெட்ரோ ரெயில், மாநில நெடுஞ்சாலைத்துறை மற்றும் மாநகராட்சி ஆகிய துறைகளுடன் விரிவாக விவாதிக்கப்பட்டது.

கூட்டத்தில் மாதிரி திட்டங்களின் செயல் விளக்கம் அளிக்கப்பட்டது. வருங்காலங்களில் மேற்குறிப்பிட்ட பணிகள் மேற்கொள்வது தொடர்பாக மூன்று துறைகளுடனான ஆலோசனை கூட்டம் மாதந்தோறும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

முன்னதாக, ரிப்பன் கட்டிட வளாக முன்பகுதியில் மெட்ரோ ரெயில் நிறுவனத்தின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் புனரமைப்பு மற்றும் அழகுப்படுத்துதல் பணிகள் ஆய்வு செய்யப்பட்டது.

கூட்டத்தில் துணை கமிஷனர்கள் எம்.எஸ்.பிரசாந்த், விசு மகாஜன், டி.சினேகா, சரண்யா அரி, தலைமை பொறியாளர்கள் எஸ்.ராஜேந்திரன், எஸ்.காளிமுத்து, நெடுஞ்சாலைத்துறை தலைமைப் பொறியாளர் சந்திரசேகரன், மேற்பார்வை பொறியாளர் இளங்கோ, கோட்டப் பொறியாளர் சரவணன் செல்வம் மற்றும் சென்னை மெட்ரோ ரெயில் நிறுவன அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்