சாலையோர பள்ளத்தில் கார் கவிழ்ந்து சென்னை பெண் டாக்டர் பலி - மற்றொருவர் படுகாயம்

சாலையோர பள்ளத்தில் கார் கவிழ்ந்து சென்னை பெண் டாக்டர் பலியானார். இதில் மற்றொருவர் படுகாயம் அடைந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

Update: 2021-08-13 07:31 GMT
சென்னை, 

சென்னை அய்யப்பன்தாங்கல் பகுதியை சேர்ந்தவர் விஜயகுமார். இவருடைய மகள் எஸ்தர் வனிதா (வயது 36). டாக்டரான இவர், பூந்தமல்லியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் பணிபுரிந்து வந்தார். இவர், ஏற்கனவே சிதம்பரத்தில் உள்ள ஆஸ்பத்திரியில் பணிபுரிந்து வந்துள்ளார். அதற்கான சான்றிதழை வாங்குவதற்காக சிதம்பரம் சென்று விட்டு காரில் சென்னை திரும்பி வந்து கொண்டிருந்தார்.

அவருடன் போரூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் பணியாற்றும் மற்றொரு டாக்டரான விருகம்பாக்கத்தை சேர்ந்த கிருஷ்ணா என்பவரும் உடன் வந்தார். காரை எஸ்தர் வனிதா ஓட்டினார். செங்கல்பட்டு மாவட்டம் செய்யூரை அடுத்த கொளத்தூர் சோதனைச்சாவடி பகுதியில் சாலை வளைவில் வரும்போது திடீரென கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் டாக்டர் எஸ்தர் வனிதா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அவருடன் பயணம் செய்த மற்றொரு டாக்டர் கிருஷ்ணா படுகாயம் அடைந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இதுபற்றி சூனாம்பேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்