ஈரோடு கொல்லம்பாளையத்தில் ஒரே வீதியில் 11 பேருக்கு கொரோனா- கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிப்பு
ஈரோடு கொல்லம்பாளையத்தில் ஒரே வீதியில் 11 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் அந்த வீதி கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டது.
ஈரோடு
ஈரோடு கொல்லம்பாளையத்தில் ஒரே வீதியில் 11 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் அந்த வீதி கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டது.
கொரோனா பாதிப்பு
ஈரோடு மாவட்டத்தில் கொரோனா தொற்றுக்கு தினமும் 150-க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். இதனால் தமிழகத்திலேயே கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ள மாவட்டங்களில் ஈரோடும் ஒன்றாக உள்ளது. தொற்று பரவுவதை கட்டுப்படுத்த சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் முக்கிய வீதிகளில் உள்ள கடைகளை அடைக்கவும், தினமும் மாலை 5 மணிக்கு பால், மருந்தகம் தவிர மற்ற கடைகளை அடைக்கவும், ஞாயிற்றுக்கிழமை சுற்றுலா தலங்கள், அருங்காட்சியகங்கள், பூங்காக்களை அடைக்கவும் உத்தரவிடப்பட்டு உள்ளது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு கொரோனா தொற்று அதிகமாக பரவியபோது பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. அதன்படி ஒரே தெருவில் 3 குடும்பத்தினருக்கு மேல் கொரோனா தொற்று ஏற்பட்டால் அந்த வீதி கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டது. அந்த பகுதியை சேர்ந்தவர்கள் வெளியே செல்லவும், வெளிநபர்கள் அங்கு செல்வதற்கும் தடை விதிக்கப்பட்டது.
11 பேருக்கு தொற்று
இந்தநிலையில் ஈரோடு கொல்லம்பாளையம் வீட்டுவசதி வாரியம் 4-வது பிரிவு பகுதியில் ஒரே வீதியில் 11 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து அந்த பகுதியில் கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டது. ஏற்கனவே தொற்று பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர், அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை கண்டறிந்து கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. மேலும், அந்த வீதி கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டது. எனவே அங்கு வெளியாட்கள் யாரும் நுழையாத வகையில் தடுப்புகள் அமைத்து, அறிவிப்பு பலகை வைக்கப்பட்டது. அங்கு கிருமி நாசினி தெளிக்கப்பட்டு சுகாதார பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்களுக்கு அத்தியாவசிய பொருட்களை வாங்கி கொடுப்பதற்காக மாநகராட்சி ஊழியர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். ஈரோடு மாநகராட்சி ஆணையாளர் இளங்கோவன் மற்றும் அதிகாரிகள் நேற்று அங்கு சென்று ஆய்வு நடத்தினார்கள். கொரோனா 2-வது அலையின்போது பல்வேறு இடங்கள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு தொற்று பரவலை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. தற்போது கொல்லம்பாளையம் வீட்டுவசதி வாரியம் கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு உள்ளதால், மாநகராட்சி பகுதியில் கொரோனாவின் கோரத்தாண்டவம் மீண்டும் தொடங்கிவிட்டதோ? என்ற அச்சம் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.