பயிற்சியின் போது போலீஸ்காரர் மயங்கி விழுந்து சாவு
பயிற்சியின் போது போலீஸ்காரர் மயங்கி விழுந்து இறந்தார்.
ராமநகர்: கதக் மாவட்டம் நரகுந்து பகுதியை சேர்ந்தவர் எல்லப்பா (வயது 36). போலீஸ்காரரான இவர், ராமநகர் மாவட்டம் சென்னபட்டணாவில் உள்ள போலீஸ் பயிற்சி மையத்தில் போலீஸ்காரர்களுக்கான பயிற்சி பெற்று வந்தார்.
நேற்று முன்தினம் நடந்த பயிற்சியின் போது எல்லப்பா திடீரென்று மயக்கம் போட்டு கீழே விழுந்தார். உடனடியாக அவரை ஆஸ்பத்திரியில் அனுமதித்து சிகிச்சை அளிக்க உயர் போலீஸ் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை எனக்கூறப்படுகிறது.
பின்னர் நீண்ட நேரம் கழித்து அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் எல்லப்பா அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி போலீஸ்காரர் எல்லப்பா உயிர் இழந்தார். உடல் நலக்குறைவால் அவர் உயிர் இழந்தது தெரியவந்துள்ளது. இதற்கிடையில், எல்லப்பா மயங்கி விழுந்ததும் துணை போலீஸ் சூப்பிரண்டு குருபிரசாத், அவரை உடனடியாக ஆஸ்பத்திரியில் அனுமதிக்க நடவடிக்கை எடுக்கவில்லை என சக போலீஸ்காரர்கள் குற்றச்சாட்டு கூறியுள்ளனர்.
மேலும் ராமநகர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் முன்பாக அதிகாரி குருபிரசாத் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பயிற்சி பெறும் போலீஸ்காரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை அதிகாரிகள் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து சென்னபட்டணா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.