நேரு குறித்து சர்ச்சை கருத்து கூறிய சி.டி.ரவி எம்.எல்.ஏ.வுக்கு, காங்கிரஸ் தலைவர்கள் கண்டனம்
நேரு குறித்து சர்ச்சைக்குரிய கருத்து கூறிய பா.ஜனதா தேசிய பொதுச் செயலாளர் சி.டி.ரவி எம்.எல்.ஏ.வுக்கு காங்கிரஸ் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
பெங்களூரு: நேரு குறித்து சர்ச்சைக்குரிய கருத்து கூறிய பா.ஜனதா தேசிய பொதுச் செயலாளர் சி.டி.ரவி எம்.எல்.ஏ.வுக்கு காங்கிரஸ் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
பா.ஜனதா தேசிய பொதுச் செயலாளர் சி.டி.ரவி எம்.எல்.ஏ. பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
தமிழகத்திலும் கூறுவேன்
பெங்களூருவில் வசிப்பவர்களில் 72 சதவீதம் பேர் வெளி மாநிலங்களை சேர்ந்தவர்கள். இதில் 16 சதவீதம் பேர் தமிழர்கள். மும்பை, சென்னை உள்ளிட்ட நகரங்களிலும் பிற மாநிலங்களை சேர்ந்தவர்கள் தான் அதிகமாக வசிக்கிறார்கள். குடிநீர் அனைவருக்கும் அவசியமானது. இந்த விஷயத்தில் யார் அரசியல் செய்தாலும் அது தவறு.
குடிநீர் விஷயத்தில் பகை அரசியல் கூடாது. மேகதாது திட்ட பிரச்சினை நல்லிணக்கமாக தீர்க்கப்பட வேண்டியது ஆகும். சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பின்படி தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நீரை பயன்படுத்த கர்நாடகம், தமிழகத்திற்கு எந்த பிரச்சினையும் இல்லை. அந்த தீர்ப்பை யார் மீறினாலும் அது பிரச்சினை ஆகும். இந்த கருத்தை நான் தமிழகத்திலும் கூறுவேன்.
இந்திரா உணவகம்
கடந்த காங்கிரஸ் ஆட்சியில் இந்திரா உணவகம் தொடங்கப்பட்டது. ஏழைகள் மீதான அக்கறையால் இந்த திட்டம் தொடங்கப்படவில்லை. அரசு பணத்தை கொள்ளையடிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் அது தொடங்கப்பட்டது. நாட்டின் வளர்ச்சிக்கு நேரு, இந்திரா காந்தி மட்டுமே பங்களிப்பு செய்துள்ளனர் என்று கூறுவது தவறு.
இந்திரா காந்தி பெயரில் 217 திட்டங்கள் உள்ளன. வேறு எந்த தலைவரும் நாட்டின் வளர்ச்சிக்கு உழைக்கவில்லையா?. ஏழைகளுக்கு இந்திரா பெயரிலோ அல்லது அன்னபூர்னேஸ்வரி பெயரிலோ எந்த பெயரில் உணவு வழங்கினால் என்ன. காங்கிரஸ் அலுவலகத்தில் இந்திரா பெயரில் உணவகத்தை திறந்தால் அதை நாங்கள் எதிர்க்க மாட்டோம். இந்திரா உணவகத்திற்கு அன்னபூர்னேஸ்வரி பெயரை சூட்ட வேண்டும் என்று ஆலோசனை மட்டுமே கூறியுள்ளேன்.
சிறப்பு விசாரணை குழு
நாங்கள் வலியுறுத்தியதால் தான் பசுவதை தடை சட்டம் கொண்டு வரப்பட்டது. தேவேகவுடாவிடம், பசவராஜ் பொம்மை வாழ்த்து பெற்றது தவறல்ல. சதீஸ்ரெட்டி எம்.எல்.ஏ. வீட்டில் கார்கள் எரிக்கப்பட்டது குறித்து சிறப்பு விசாரணை குழு அமைத்து விசாரணை நடத்த வேண்டும். தவறு செய்தவர்களுக்கு தக்க தண்டனை கிடைக்க வேண்டும்.
சமூகநீதியை உறுதி செய்யும் விதமாக மருத்துவ கல்வியில் பிற்படுத்தப்பட்ட பிரிவுகளுக்கு இட ஒதுக்கீடு அளிக்கப்பட்டுள்ளது. பிற்படுத்தப்பட்ட சாதிகளை அடையாளம் காணும் அதிகாரம் மாநிலங்களுக்கு வழங்கும் சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது.
இவ்வாறு சி.டி. ரவி கூறினார்.
சர்ச்சைக்குரிய கருத்து
சி.டி.ரவி பேட்டியின்போது, "காங்கிரசார் தங்களது கட்சி அலுவலகத்தில் நேரு பார் அல்லது நேரு ஹுக்கா பார் (விடுதி) திறந்து கொள்ளட்டும். அதற்கு எங்களது ஆட்சேபனை இல்லை" என்று சர்ச்சைக்குரிய கருத்தை கூறினார். இதற்கு காங்கிரஸ் தலைவர்கள் சித்தராமையா, டி.கே.சிவக்குமார் உள்பட பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். பா.ஜனதா தலைவர்கள் தரம் தாழ்ந்து பேசுவதாகவும், இது தான் அவர்களின் கலாசாரம் என்றும் கருத்து தெரிவித்துள்ளனர்.