மணப்பாறை பகுதியில் 17 மொபட்டுகளை திருடிய வாலிபர் கைது
மணப்பாறை பகுதியில் 17 மொபட்டுகளை திருடிய வாலிபரை போலீசார் கைது செய்ததுடன் அவரிடம் இருந்து அந்த மொபட்டுகளும் மீட்கப்பட்டன.
மணப்பாறை,
மணப்பாறை பகுதியில் 17 மொபட்டுகளை திருடிய வாலிபரை போலீசார் கைது செய்ததுடன் அவரிடம் இருந்து அந்த மொபட்டுகளும் மீட்கப்பட்டன.
தொடர் திருட்டு
திருச்சி மாவட்டம், மணப்பாறை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இருசக்கர வாகனங்கள் அதிக அளவில் மாயமாகி வந்தது. இதனால் இருசக்கர வாகனங்களை திருடிச் செல்லும் கொள்ளையர்களை பிடிக்க போலீசார் தீவிரமாக கண்காணித்து வந்தனர்.
அதன்படி மணப்பாறை போலீஸ் துணை சூப்பிரண்டு பிருந்தா தலைமையில் பல்வேறு பகுதிகளில் அவ்வபோது வாகன தணிக்கையும் நடைபெற்று வந்தது. அதன்படி நடைபெற்ற வாகன தணிக்கையில் வாலிபர் ஒருவரை நிறுத்தி சோதனை செய்த போது அவர் முன்னுக்குப் பின் முரணாக தகவல் அளித்தார்.
வாலிபர் கைது
இதையடுத்து அவரை போலீசார் அழைத்துச் சென்று விசாரணை நடத்திய போது மணப்பாறை மற்றும் திருச்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மொபட்டுகளையும் திருடியதும் ஊத்துக்குளி வடக்குத் தெருவைச் சேர்ந்த கார்த்திகேயன் (வயது 23) என்பதும் விசாரணையில் தெரியவந்தது.
இதையடுத்து அவர் மீது மணப்பாறை போலீசார் வழக்கு பதிவு செய்து 17 ெமாபட்டுகளையும் பறிமுதல் செய்தனர்.
இந்த சம்பவத்தில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திகேயன் மொபட்டுகளை திருடுவதற்கான யுக்தி தான் அனைவரையும் அதிர வைத்தது. எந்தஇடத்தில் மொபட்டுகளை திருடச் சென்றாலும் அந்த இடத்திலேயே உடனடியாக ஒரு சாவியை தயார் செய்து அந்த சாவியை போட்டு தான் வண்டியை எடுத்துச்செல்வதாக போலீசாரிடம் தெரிவித்ததுடன் அதை செய்தும் காட்டினார்.