ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து பணத்தை கொள்ளையடிக்க முயற்சி

சிவகாசியில் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து பணத்தை கொள்ளையடிக்க முயற்சி நடந்ததாக வங்கி மேலாளர் போலீசில் புகார் அளித்தார்.

Update: 2021-08-12 18:52 GMT
சிவகாசி, 
சிவகாசியில் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து பணத்தை கொள்ளையடிக்க முயற்சி நடந்ததாக வங்கி மேலாளர் போலீசில் புகார் அளித்தார். 
தனியார் வங்கி 
சிவகாசி மேலரதவீதியில் தனியார் வங்கி ஏ.டி.எம். மையம் உள்ளது. இங்கு வைக்கப்பட்டிருந்த ஏ.டி.எம். எந்திரம் சேதப்படுத்தப்பட்டு இருப்பதை வங்கி மேலாளர் கிறிஸ்டோபர் ராய்ஸ்டன் எம். ஏஞ்சல்ஸ் (வயது 31) என்பவர் கவனித்துள்ளார். 
பின்னர் இதுகுறித்து வங்கியின் தலைமைக்கு தகவல் தெரிவித்துள்ளார். அவர்கள் ஏ.டி.எம். மையத்தில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமிராவில் பதிவாகி இருந்த காட்சிகளை ஆராய்ந்த போது அதில் 11-ந்தேதி அதிகாலை 2.15 மணிக்கு ஒரு நபர் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து அதில் இருந்து பணத்தை எடுக்க முயற்சி செய்த காட்சிகள் பதிவாகி இருந்தது. 
கொள்ளை முயற்சி 
இந்த சம்பவத்தில் ஏ.டி.எம். எந்திரத்தில் இருந்த பணம் எதுவும் எடுக்க முடியாமல் அந்த நபர் திரும்பி சென்றதாக கூறப்படுகிறது. 
இதுகுறித்து வங்கி மேலாளர் அளித்த புகாரின் பேரில்  சிவகாசி டவுன் குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். வழக்கமாக இரவு நேரங்களில் சுழற்சி முறையில் போலீசார் வங்கி ஏ.டி.எம். மையங்களுக்கு சென்று அங்குள்ள புத்தகத்தில் தாங்கள் இந்த பகுதிக்கு வந்து சென்றதுக்கு அடையாளமாக கையெழுத்து போடுவது உண்டு. அன்றும் அதே போல் ஒரு போலீஸ்காரர் கையெழுத்து போட்டுள்ளார். இதை அந்த பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட அதிகாரியும் சரி பார்த்துள்ளார். ஆனாலும் இந்த கொள்ளை முயற்சி நடந்துள்ளது.
குற்ற சம்பவம் 
 இது சிவகாசி பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சிவகாசியில் ஏற்கனவே வங்கி முன்பு ஒருவரை ஏமாற்றி அவர் வைத்திருந்த பணத்தை ஒரு கும்பல் பறித்து சென்றது. 
ராணுவவீரர் ஒருவரின் தந்தையிடம் ஏ.டி.எம். கார்டை பெற்ற பெண் ஒருவர் ரூ.60 ஆயிரத்தை அபேஸ் செய்து விட்டு தப்பி ஓடிவிட்டார். இப்படி தொடர்ந்து வங்கி தொடர்பாக குற்ற சம்பவங்கள் நடக்கிறது. இதை சம்மந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து தவறு செய்தவர்களை கைது செய்தால் தான் பொதுமக்கள் மத்தியில் தற்போது உள்ள அச்சம் விலகும். அதேபோல் ஏ.டி.எம். மையங்களில் பாதுகாவலர் நியமிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்