மாணவர்களுக்கு பாடம் நடத்தப்பட்டதா?
அரசு பள்ளிக்கு வரவழைத்து மாணவர்களுக்கு பாடம் நடத்தப்பட்டதாக சமூக வலைத்தளங்களில் புகைப்படம் வைரலாகி வருகிறது.
செந்துறை:
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் தாலுகா செந்துறை அருகே பிள்ளையார்நத்தத்தில் ஊராட்சி ஒன்றிய அரசு தொடக்கப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் தலைமை ஆசிரியர் மற்றும் 4 ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர்.
இந்தநிலையில் அந்த பள்ளிக்கு நேற்று மாணவர்களை வரவழைத்து, ஆசிரியர்கள் பாடம் நடத்தியதாக கூறப்படுகிறது.
இது தொடர்பான புகைப்படம் வாட்ஸ்-அப், முகநூல் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் வைரலானது.
அதில் வகுப்பறையில் பாடப்புத்தகங்களை திறந்து வைத்தப்படி முக கவசம் அணியாமலும், சமூக இடைவெளியை கடைபிடிக்காமலும் மாணவ-மாணவிகள் அமர்ந்திருக்கும் காட்சி இடம்பெற்றிருந்தது. இந்த சம்பவம், அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இது குறித்து தலைமை ஆசிரியர் பழனிவேல் கூறும்போது, மாணவர்களுக்கு ஆசிரியர்கள் பாடங்கள் எதுவும் கற்பிக்கவில்லை. கல்வித்துறை அதிகாரிகளின் அறிவுரைப்படி சத்துணவு முட்டை மற்றும் பாடப்புத்தகங்கள் பெறுவதற்காகவே மாணவ-மாணவிகள் பள்ளிக்கு வரவழைக்கப்பட்டனர். அவற்றை வழங்கியவுடன் மாணவ-மாணவிகள்அங்கிருந்து சென்று விட்டனர் என்றார்.