கடந்த 3 நாட்களில் 1,000 பேர் பள்ளிகளில் சேர்ப்பு
கரூரில் பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுப்பு பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. கடந்த 3 நாட்களில் மட்டும் 1,000 குழந்தைகள் பள்ளிகளில் சேர்க்கப்பட்டு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
கரூர்
கரூரில் பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுப்பு பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. கடந்த 3 நாட்களில் மட்டும் 1,000 குழந்தைகள் பள்ளிகளில் சேர்க்கப்பட்டு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
பள்ளி செல்லா குழந்தைகள்
கரூர் தாந்தோணிமலை அரசு தொடக்கப்பள்ளியில் பள்ளி செல்லா குழந்தைகளை கணக்கெடுத்து அவர்களை பள்ளியில் சேர்க்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. பள்ளி தலைமை ஆசிரியர் சாந்தி தலைமை தாங்கினார்.
மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி கலந்து கொண்டு பள்ளியில் சேர்ந்த மாணவ-மாணவிகளுக்கு புத்தகங்களை வழங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
ஆன்லைன் வகுப்புகள்
6 வயது முதல் 19 வயதுடைய பள்ளி செல்லா குழந்தைகளை கண்டறிந்து பள்ளியில் சேர்க்க பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் தீவிரம் காட்ட வேண்டும். மாணவர்களுக்கு தரமான கல்வி தருவதே அரசின் நோக்கமாகும். தனியார் பள்ளிகளை போல் அரசு பள்ளிகளிலும் ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடைபெறுகிறது.
பள்ளி செல்லா குழந்தைகளை ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்கள் கண்டுபிடித்து அருகில் உள்ள பள்ளி தலைமை ஆசிரியரிடமோ அல்லது கல்வி துறை அதிகாரிகளுக்கோ தகவல் கொடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்ச்சியில் ஒருங்கிணைந்த பள்ளி உதவி திட்ட அலுவலர் மகாலிங்கம், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சுபா வடிவேல் உள்பட பள்ளி ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
1,000 பேர் பள்ளிகளில் சேர்ப்பு
இதுகுறித்து கல்வி அதிகாரிகள் கூறியதாவது:- கரூர் மாவட்டத்தில் பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுப்பு பணி தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது. கரூர் மாவட்டத்தில் கடந்த 3 நாட்களில் மட்டும் பள்ளி செல்லா குழந்தைகள் 1,000 பேர் கண்டறிந்து அவர்கள் அருகே உள்ள பள்ளிகளில் சேர்க்கப்பட்டு உள்ளனர்.
தாந்தோணிமலை அரசு தொடக்கப்பள்ளியில் கடந்த ஆண்டு வரை 207 பேர் பயின்று வந்த நிலையில் இந்த ஆண்டு மட்டும் கூடுதலாக 225 மாணவர்கள் சேர்க்கப்பட்டு உள்ளனர். இதில் 170 பேர் ஆங்கில வழி கல்வியை தேர்வு செய்து உள்ளனர்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.