சேறும், சகதியுமான பாதைகளில் மூங்கில்களை பதித்து நடக்கும் மக்கள்

முதுமலையில் சாலை வசதி இல்லாததால் சேறும், சகதியுமான பாதைகளில் மூங்கில்களை பதித்து மக்கள் நடக்கின்றனர். இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Update: 2021-08-12 17:27 GMT
கூடலூர்,

முதுமலையில் சாலை வசதி இல்லாததால் சேறும், சகதியுமான பாதைகளில் மூங்கில்களை பதித்து மக்கள் நடக்கின்றனர். இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்து உள்ளனர்.

நீலகிரி மாவட்டம் கூடலூர், பந்தலூர் தாலுகா பகுதியில் எந்த துறைக்கு ஒப்படைப்பது என்று முடிவு செய்யப்படாத அரசு நிலம் உள்ளது. இங்கு கட்டுமானம் உள்பட வளர்ச்சி பணிகள் மேற்கொள்ள தடை விதிக்கப்பட்டு இருக்கிறது.

கூடலூர் அருகே முதுமலை ஊராட்சி, புலிகள் காப்பக வனப்பகுதியில் உள்ளது. இங்கு 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். பாதுகாக்கப்பட்ட வனம் என்பதால் சாலை, தெருவிளக்கு உள்ளிட்ட எந்த அடிப்படை வசதிகளும் இதுவரை செய்யப்படவில்லை. இதனால் பொதுமக்கள் பல்வேறு சிரமங்களுக்கு ஆளாகி வருகின்றனர். 

குறிப்பாக சாலை வசதி இல்லாததால் பெரும்பாலான மக்கள் தங்களது கிராமங்களில் இருந்து நடந்து மண்வயல் பஜாருக்கு வந்து செல்கின்றனர். இந்த சமயத்தில் வனவிலங்குகளின் தாக்குதலுக்கு ஆளாகி வருகின்றனர். கூடலூர் பகுதியில் ஆண்டுதோறும் 6 மாதங்கள் தொடர்ந்து மழை பெய்கிறது. அந்த காலக்கட்டங்களில் சேறும், சகதியுமாக உள்ள பாதையில் நடந்து செல்கின்றனர். 

அப்போது காட்டுயானைகள் உள்ளிட்ட வனவிலங்குகள் துரத்தினாலும் விரைவாக ஓட முடியாமல் வழுக்கி விழுந்து எழுகின்றனர். மேலும் அந்த வழியாக வாகனங்களும் இயக்க முடியாத நிலை உள்ளது. இது தவிர அவசர நேரத்தில் நோயாளிகள், கர்ப்பிணிகளை உடனடியாக ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்ல முடியாமல் உள்ளது.

மாற்று இடம் வழங்கும் திட்டம் முழுமை பெறும் வரையில் தங்களுக்கு தற்காலிக சாலை அமைத்து தர வேண்டும் என்று முதுமலை ஊராட்சி மக்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால் வனத்துறையினரின் தடையால் எந்த பணிகளும் மேற்கொள்ள முடியவில்லை. 

இதனால் சேறும், சகதியுமாக உள்ள பாதையில் மூங்கில்களை பதித்து மக்கள் நடந்து செல்கின்றனர். இந்த நிலை மாற சோலிங்கற்களையாவது பதித்து சிரமமின்றி நடந்து செல்ல நடவடிக்கை எடுக்கப்படுமா? என்று எதிர்பார்த்து உள்ளனர்.

இதுகுறித்து முதுமலை ஊராட்சி மக்கள் கூறியதாவது:- மாற்று இடம் வழங்கும் திட்டத்தில் பல்வேறு குளறுபடிகள் நீடித்து வருகிறது. பயனாளிகள் பலர் ஊராட்சியை விட்டு வெளியேறினாலும், அவர்களின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்படவில்லை. 

இதனால் மீதமுள்ள மக்கள் வெளியேற காலம் தாழ்த்தி வருகின்றனர். இத்திட்டம் முழுமை பெறும் வரை சோலிங்கற்களை பதித்து தற்காலிக சாலை அமைத்து தர வேண்டும். எங்கள் நிலையை கண்டு அதிகாரிகள் மனிதாபிமான முறையிலாவது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

மேலும் செய்திகள்