திட்டக்குடி அருகே நெல் கொள்முதல் நிலையம் மூடல் தாசில்தார் முன்பு நெல்லை கொட்டி விவசாயிகள் போராட்டம்
திட்டக்குடி அருகே நெல் கொள்முதல் நிலையம் திடீரென மூடப்பட்டதால், தாசில்தார் முன்பு நெல்லை கொட்டி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திட்டக்குடி,
திட்டக்குடி அருகே தர்மக்குடிக்காடு மெயின் ரோட்டில் அரசு நெல் கொள்முதல் நிலையம் உள்ளது. இங்கு திட்டக்குடி மற்றும் சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் தங்களது நிலத்தில் விளைந்த நெல்லை கொண்டு வந்து விற்பனை செய்வார்கள். அந்த வகையில் தற்போது அறுவடை செய்யப்பட்ட நெல்லை விற்பனை செய்வதற்காக நெல் கொள்முதல் நிலையத்தில் விவசாயிகள் மூட்டைகளாக வைத்திருந்தனர். டோக்கன் அடிப்படையில் நெல் கொள்முதல் செய்யப்பட்டு வந்தது.
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நெல் கொள்முதல் நிலையம் திடீரென மூடப்பட்டது. இதனால் விற்பனை செய்வதற்காக டோக்கன் வாங்கியிருந்த விவசாயிகளின் நெல்முட்டைகள் அனைத்தும் நெல் கொள்முதல் நிலையத்திலேயே அடுக்கி வைக்கப்பட்டிருந்தது.
சாலை மறியலில் ஈடுபட முயற்சி
நெல் கொள்முதல் நிலையத்தை திறந்து நெல்லை கொள்முதல் செய்ய வேண்டும் என்று விவசாயிகள் அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்து வந்தனர். இருப்பினும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என தெரிகிறது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு திட்டக்குடி பகுதியில் பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக நெல் கொள்முதல் நிலையத்தில் வைத்திருந்த நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதமானது.
இதனால் ஆத்திரமடைந்த விவசாயிகள், அறுவடை செய்யப்பட்ட நெல்லை கொள்முதல் செய்ய வலியுறுத்தி நேற்று காலையில் சாலை மறியலில் ஈடுபட முயன்றனர்.
நெல்லை கொட்டி போராட்டம்
இதுபற்றி தகவல் அறிந்த திட்டக்குடி தாசில்தார் தமிழ்செல்வி, சப்-இன்ஸ்பெக்டர் சந்துரு தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அப்போது விவசாயிகள் சிலர், திடீரென தாசில்தார் தமிழ்செல்வி மற்றும் அவருடைய வாகனத்தின் முன்பு நெல்லை கொட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து தாசில்தார் தமிழ்செல்வி விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது நெல் கொள்முதல் நிலையத்தில் உள்ள நெல்மூட்டைகளை உடனடியாக கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.
இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி நெல்லை கொள்முதல் செய்ய உரிய நடவடிக்கை எடுப்பதாக தாசில்தார் தமிழ்செல்வி தெரிவித்தார். இதையேற்று விவசாயிகள் போராட்டத்தை கைவிட்டனர்.
இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.