மாமனாரை இரும்பு கம்பியால் தாக்கிய மருமகன்

திண்டுக்கல் அருகே மாமனாரை இரும்பு கம்பியால் தாக்கிய மருமகனை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Update: 2021-08-12 16:43 GMT
திண்டுக்கல் : 
திண்டுக்கல் அருகே உள்ள ஏ.வெள்ளோடு கிழக்கு தெருவை சேர்ந்தவர் தேவராஜ் (வயது 48). கூலி தொழிலாளி. அவருடைய மகள் நம்பிக்கை மேரி (வயது 23). இவருக்கும், அதே ஊரை சேர்ந்த ஆரோக்கியதாஸ் என்பவருக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. ஆரோக்கியதாஸ் கூலிக்கு பால் கரக்கும் வேலை செய்கிறார். இந்த தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இந்தநிலையில் கணவன்-மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு இருந்து வந்தது. 

அதன்படி நேற்று மாலை அவர்களுக்கிடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இது தொடர்பாக நம்பிக்கை மேரியின் தந்தை தேவராஜ், ஆரோக்கிதாசிடம் தட்டிக்கேட்டார். இதனால் ஆத்திரமடைந்த ஆரோக்கியதாஸ், தேவராஜை இரும்பு கம்பியால் சரமாரியாக தாக்கி விட்டு தப்பி ஓடி விட்டார். இதில் மயங்கி விழுந்த தேவராஜை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.


இதற்கிடையே தந்தையை கணவர் தாக்கியதால் மனம் உடைந்த நம்பிக்கை மேரி தனது வீட்டில் இருந்த பினாயிலை குடித்து தற்கொலைக்கு முயன்றார். அவருக்கு, திணடுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக அம்பாத்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்