டாஸ்மாக் பாரில் மது விற்பனை

திருப்பூரில் சட்ட விரோதமாக மது விற்பனை செய்யப்பட்டதாக வந்த புகார் எதிரொலியாக திருப்பூர் டாஸ்மாக் பார்களில் அதிகாரிகள் அதிரடியாக சோதனை நடத்தினார்கள். இதில் ரூ.5 லட்சம் மதிப்பிலான மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதுடன், 6 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2021-08-12 15:36 GMT
அனுப்பர்பாளையம்
திருப்பூரில் சட்ட விரோதமாக மது விற்பனை செய்யப்பட்டதாக வந்த புகார் எதிரொலியாக திருப்பூர் டாஸ்மாக் பார்களில் அதிகாரிகள் அதிரடியாக சோதனை நடத்தினார்கள். இதில் ரூ.5 லட்சம் மதிப்பிலான மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதுடன், 6 பேர் கைது செய்யப்பட்டனர்.
சோதனை
கொரோனா பரவலை தடுக்கும் வகையில் திருப்பூர் மாவட்டத்தில் கடந்த 1 ஆண்டுகளாக டாஸ்மாக் பார்கள் மூடப்பட்டுள்ளன. மேலும் தற்போது அரசு உத்தரவின்படி டாஸ்மாக் கடைகள் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக திருப்பூர் மாநகரில் பார் உரிமையாளர்கள் மற்றும் ஊழியர்கள் டாஸ்மாக் கடை ஊழியர்களை மிரட்டி, மொத்தமாக மதுபாட்டில்களை வாங்கி பார்களில் பதுக்கி வைப்பதுடன், சட்ட விரோதமாக அதிக விலைக்கு விற்பனை செய்வதாகவும் தொடர்ந்து புகார் எழுந்தது. 
டாஸ்மாக் கடைகள் மூடப்பட்ட பிறகும், அதிகாலை நேரத்திலும் மது விற்பனை நடைபெறுவதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் டாஸ்மாக் மாவட்ட மேலாளர் சவுந்தரபாண்டியன் தலைமையில், கலால் உதவி ஆணையர் சுகுமார், திருப்பூர் வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் கணேசன், சப்இன்ஸ்பெக்டர் கார்த்தி மற்றும் அதிகாரிகள் நேற்று அதிகாலை அவினாசி ரோடு காந்திநகர் மற்றும் சுற்று வட்டாரத்தில் உள்ள டாஸ்மாக் பார்களில் அதிரடியாக சோதனை நடத்தினார்கள்.
 மதுபாட்டில்கள் பறிமுதல்
அப்போது ஒருசில பார்களில் மது விற்பனை நடைபெற்று கொண்டிருந்தது. இதையடுத்து அதிகாரிகள் உள்ளே சென்று சோதனை நடத்தியபோது, அங்கு பெட்டி, பெட்டியாக மதுபாட்டில்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தது. இதன்படி ஒரு பாரில் ரூ.3 லட்சம் மதிப்புள்ள மது பாட்டில்களும், மற்றொரு பாரில் ரூ.1 லட்சம் மதிப்புள்ள மதுபாட்டில்களும் இருப்பது கண்டறியப்பட்டது. 
இதேபோல் மற்ற பார்களிலும் எண்ணிக்கை குறைவாக மதுபாட்டில்கள் இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து 2 பார்களிலும் இருந்த 6 ஊழியர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு, அவர்கள் 6 பேரும் கைது செய்யப்பட்டனர். மேலும் பார்களில் இருந்த ரூ.5 லட்சம் மதிப்பிலான 3 ஆயிரத்து 120 மது பாட்டில்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். 
கடும் நடவடிக்கை
அரசு உத்தரவை மீறி பார்களில் சட்ட விரோதமாக மது விற்பனை செய்பவர்கள் மீதும், டாஸ்மாக் கடைகளில் மது பாட்டில்களை மொத்தமாக விற்பனை செய்யும் ஊழியர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மாவட்ட மேலாளர் சவுந்தரபாண்டியன் எச்சரிக்கை விடுத்துள்ளார். திருப்பூரில் டாஸ்மாக் பார்களில் அதிகாரிகளின் அதிரடி சோதனையில் ரூ.5 லட்சம் மதிப்பிலான மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்