தஞ்சை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் சகோதரியுடன், பெண் தீக்குளிக்க முயற்சி
கணவர் மற்றும் அவருடைய உறவினர்கள் துன்புறுத்துவதாக கூறி தஞ்சை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் சகோதரியுடன் பெண் தீக்குளிக்க முயன்றார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
தஞ்சாவூர்,
புதுக்கோட்டை புது கோல்டன் நகரை சேர்ந்தவர் சீனிவாச நாயுடு. இவர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவருடைய மகள் ராதா(வயது 35). இவர், நேற்று தனது சகோதரி சரோஜா(50), சகோதரர் ஜகநாதன்(34) ஆகியாருடன் தஞ்சை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு வந்தார்.
பின்னர் திடீரென தனது சகோதரி சரோஜா உடலிலும், தனது உடலிலும் தான் கொண்டு வந்த பெட்ரோலை ஊற்றி தீக்குளிக்க முயன்றார்.
அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த போலீசார் அதைப்பார்த்து ஓடி வந்து தடுத்து அவர்கள் மீது தண்ணீரை ஊற்றினர். பின்னர் ராதா மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ரவளிபிரியாவிடம் ஒரு மனு கொடுத்தார். அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது:-
எனது பெற்றோர் இறந்து விட்ட நிலையில் திருமணம் ஆகாத அக்கா, தம்பி ஆகியோருடன் நான் வசித்து வருகிறேன். இந்த நிலையில் கடந்த 2020-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 29-ந ்தேதி எனக்கும் தஞ்சை கவாஸ்கார தெருவை சேர்ந்த ஒருவருக்கும் திருமணம் நடந்தது. எங்கள் திருமணத்தின் போது 5 பவுன் நகை, ரூ.50 ஆயிரம் ரொக்கம் என சீர்வரிசையாக கொடுக்கப்பட்டது.
இந்த நிலையில் ஓரிரு மாதங்கள் கழித்து எனது கணவர் என்னை கொடுமைப்படுத்துவதுடன் என்னுடன் வாழாமல் இன்னொரு பெண்ணுடன் வசித்து வருகிறார். இதனை தட்டிக்கேட்டால் கொலை மிரட்டல் விடுத்து வருகிறார். இதற்கு அவருடைய குடும்பத்தினரும் உடந்தையாக உள்ளனர்.
இது குறித்து தஞ்சை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் நான் புகார் செய்தும் போலீசார் இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கவில்லை.
எனக்கு உறவினர் யாரும் பக்கபலமாக இல்லாத நிலையில் எனது மூத்த சகோதரியும் திருமணம் ஆகாமல் முதிர் கன்னியாகவே உள்ளார். எனது சகோதரரும் திருமண வயதை கடந்து வீட்டில் இருந்து வரும் நிலையில் எனது வாழ்க்கையும் கேள்விக்குறியாகி விட்டது.
எனவே எனது கணவர், மாமனார், மாமியார், கணவரின் தம்பி, அவருடைய மனைவி உள்ளிட்ட 7 பேர் மீதும் தகுந்த நடவடிக்கை எடுத்து எனக்கு நீதி கிடைக்க வழி வகை செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
தீக்குளிக்க முயன்ற சம்பவத்தையடுத்து 2 பெண்களையும் தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழக போலீசார் அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்த சம்பவத்தால் தஞ்ைச மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.