சேதம் அடைந்த ரேஷன் கடைக்கு புதிய கட்டிடம் கட்ட வேண்டும் கிராம மக்கள் கோரிக்கை
ஓகைப்பேரையூரில் சேதம் அடைந்த ரேஷன் கடைக்கு புதிய கட்டிடம் கட்ட வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
கூத்தாநல்லூர்,
திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் அருகே ஓகைப்பேரையூரில் ரேஷன் கடை உள்ளது. இதன் மூலம் ஓகைப்பேரையூர் கிராம மக்களுக்கு அரிசி, சீனி, கோதுமை, மண்எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசிய ரேஷன் பொருட்கள் வினியோகம் செய்யப்பட்டு வந்தது. நாளடைவில் ரேஷன் கடை கட்டிடம் சேதம் அடைந்தது.
ரேஷன் கட்டிடத்தில் விரிசல்கள் ஏற்பட்டு சிமெண்டு காரைகள் பெயர்ந்தன. கான்கிரீட் கம்பிகள் வெளியில் தெரியும் அளவுக்கு சேதம் ஏற்பட்டு உள்ளது. மழைநீர் ஒழுகி ரேஷன் பொருட்கள் நனைந்து வீணாயின. கட்டிடம் மிகவும் மோசமான நிலையில் இருந்ததால், அருகில் உள்ள சமுதாய கூடத்தில் தற்போது ரேஷன் கடை தற்காலிகமாக இயங்கி வருகிறது.
அங்கு போதிய வசதி இல்லாததால் சிரமப்பட்டு வருவதாக கிராம மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
எனவே சேதம் அடைந்த ஓகைப்பேரையூர் ரேஷன் கடை கட்டிடத்தை இடித்து அகற்றிவிட்டு அதே இடத்தில் புதிதாக ரேஷன் கடை கட்ட வேண்டும் என கிராம மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.