6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாற்றுத்திறனாளிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
காட்பாடி ரெயில் நிலையம் முன்பு 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாற்றுத்திறனாளிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.
காட்பாடி,
காட்பாடி ரெயில் நிலையம் முன்பு தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட பொருளாளர் வீரபாண்டியன் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் சுகுமார், லட்சுமய்யா, குருமூர்த்தி, தில்ஷாத் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் கோபால ராஜேந்திரன் சிறப்புரையாற்றினார்.
ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள், ஏற்கனவே பெற்று வந்த ரெயில் கட்டண சலுகைகளை பறிக்கக் கூடாது. ஏற்கனவே இருந்தது போல் மாற்றுத்திறனாளிகளுக்கான தனி ரெயில் பெட்டிகளை இனணத்திட வேண்டும். பிளாட்பார டிக்கெட் ரூ.50 என உயர்த்தியுள்ளதை குறைக்க வேண்டும். ரூ.2 கோடி மதிப்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு என ரெயில் நிலையத்தில் அமைக்கப்பட்ட தானியங்கி நகரும் படிக்கட்டை செயல்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும், மத்திய அரசின் மாற்றுத்திறனாளிகள் மீதான விரோத போக்கை கண்டிப்பது உள்பட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.
இதில் சி.பி.ஐ. நகர செயலாளர் சீனிவாசன், நிர்வாகிகள் திலீபன், சுடரொளியன், கணேஷ் உள்பட பலர் கலந்துகொண்டனர்.