உப்பள்ளி-தார்வார், பெலகாவி, கலபுரகி ஆகிய 3 மாநகராட்சிகளுக்கு வருகிற 3-ந் தேதி தேர்தல்
உப்பள்ளி-தார்வார், பெலகாவி, கலபுரகி ஆகிய 3 மாநகராட்சிகளுக்கு வருகிற செப்டம்பர் 3-ந் தேதி தேர்தல் நடைபெறும் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
பெங்களூரு: உப்பள்ளி-தார்வார், பெலகாவி, கலபுரகி ஆகிய 3 மாநகராட்சிகளுக்கு வருகிற செப்டம்பர் 3-ந் தேதி தேர்தல் நடைபெறும் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
11 மாநகராட்சிகள்
கர்நாடகத்தில் பெங்களூரு, பல்லாரி, பெலகாவி, உப்பள்ளி-தார்வார், மங்களூரு, மைசூரு, கலபுரகி, துமகூரு, சிவமொக்கா, விஜயாப்புரா என்று 11 மாநகராட்சிகள் உள்ளன. இதில் பெங்களூருவை தவிர மற்ற மாநகராட்சி மன்றங்களுக்கு 5 ஆண்டுகளுக்கு ஒரு முறையும், மேயர், துணை மேயர் பதவிகளுக்கு ஆண்டுக்கு ஒரு முறையும் தேர்தல் நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் வடகர்நாடகத்தில் உள்ள பெலகாவி, உப்பள்ளி-தார்வார், கலபுரகி ஆகிய 3 மாநகராட்சிகளின் பதவிக்காலம் பதவிக்காலம் நிறைவடைய உள்ளது. இதனால் அந்த 3 மாநகராட்சிகளுக்கும் தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் முடிவு செய்து உள்ளது.
இதுகுறித்து கர்நாடக மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
உள்ளாட்சி தேர்தல்
கர்நாடகத்தில் பெலகாவி, உப்பள்ளி-தார்வார், கலபுரகி ஆகிய 3 மாநகராட்சிகளின் பதவி காலம் நிறைவடைய உள்ளதால், அவற்றுக்கு உள்ளாட்சி தேர்தல் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த தேர்தல் செப்டம்பர் மாதம் 3-ந் தேதி நடைபெறும். ஓட்டுப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 5 மணி வரை நடைபெறும். இதற்கான வேட்புமனு தாக்கல் வருகிற 16-ந் தேதி தொடங்குகிறது. மனு தாக்கல் செய்ய 23-ந் தேதி கடைசி நாள் ஆகும். 24-ந் தேதி மனுக்கள் பரிசீலனை நடக்கிறது. மனுக்களை வாபஸ் பெற 26-ந் தேதி கடைசி நாள். மறு தேர்தல் இருந்தால் அது 5-ந் தேதி நடைபெறும். ஓட்டு எண்ணிக்கை 6-ந் தேதி நடைபெறும். இந்த தேர்தல் நடத்தை விதிமுறைகள் வருகிற 16-ந் தேதி முதல் அந்த மூன்று மாநகராட்சியில் அமலுக்கு வரும். தேர்தல் பணியில் ஈடுபடும் ஊழியர்களுக்கு உரிய பயிற்சி அளிக்க மாவட்ட தேர்தல் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
195 வார்டுகள்
பெலகாவியில் 58 வார்டுகள், உப்பள்ளி-தார்வாரில் 82 வார்டுகள், கலபுரகியில் 55 வார்டுகள் என மொத்தம் 195 வார்டுகள் உள்ளன. இந்த வார்டுகளில் பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெறும் கட்சிகளுக்கு மேயர் பதவி கிடைக்கும். இந்த 3 மாநகராட்சிகளையும் கைப்பற்ற ஆளும் பா.ஜனதா திட்டமிட்டுள்ளது. இந்த உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்று ஆளுங்கட்சிக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுக்க காங்கிரஸ் வியூகம் வகுத்து வருகிறது.
வடகர்நாடகத்தில் சமீபத்தில் மழை, வெள்ளம் மக்களை புரட்டி போட்டது. இதனால் மக்கள் வீடுகள், உடைமைகளை இழந்தனர். மேலும் வாழ்வாதாரம் இழந்து நடுத்தெருவில் நிற்கின்றனர். தங்களுக்கு அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் உதவி செய்யவில்லை என்றும் குற்றச்சாட்டு கூறி வருகின்றனர். இது இந்த தேர்தலின் போது எதிரொலிக்கும் என்று கூறப்படுகிறது.