கோவிலில் கோபுர கலசம் திருட்டு
திருவையாறு அருகே கோவிலில் கோபுர கலசத்தை மர்ம நபர்கள் திருடி சென்றனர். ஒரு வாரத்தில் 8 கலசங்கள் திருட்டுப்போனதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.
திருவையாறு;
திருவையாறு அருகே கோவிலில் கோபுர கலசத்தை மர்ம நபர்கள் திருடி சென்றனர். ஒரு வாரத்தில் 8 கலசங்கள் திருட்டுப்போனதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.
சங்கிலி கருப்பு சாமி கோவில்
தஞ்சை மாவட்டம் திருவையாறு அருகே உள்ள ஒக்ககுடி கிராமத்தில் கொள்ளிடம் ஆற்றங்கரை தென்பகுதியில் சங்கிலி கருப்பு சாமி கோவில் உள்ளது. இந்த கோவிலின் பூசாரியாக செம்மங்குடியை சேர்ந்த ஞானஸ்கந்தன்(வயது53) உள்ளார். நேற்று காலை இவர் பூஜை செய்ய கோவிலுக்கு சென்ற போது சங்கிலி கருப்புசாமி கோவில் கோபுரத்தில் இருந்த ஒரு கலசத்தை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது.
இது குறித்து இந்து சமய அறநிலையத்துறை செயல் அலுவலர் ராஜேஷ் மணிகண்டனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இது குறித்து தகவல் அறிந்த திருவையாறு போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். ஆனால் கோபுர கலசத்தை திருடி சென்ற நபர்கள் குறித்து முதற்கட்ட தகவல் கிடைக்கவில்லை.
8 கலசங்கள் திருட்டு
கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு விளாங்குடியில் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான கோவிலில் 7 கலசங்கள் திருட்டுபோனது. தற்போது ஒக்கக்குடியில் உள்ள கோவிலில் உள்ள கலசமும் திருட்டுபோய் உள்ளது. இந்த கோவில்கள் அனைத்தும் கொள்ளிடம் ஆற்றங்கரையில் ஆட்கள் நடமாட்டம் இல்லாத பகுதியில் உள்ளதால் கோவில் கலசங்கள் தொடர்ந்து திருட்டு போய் உள்ளது குறிப்பிடத்தக்கது. ஒரு வாரத்தில் கோவில்களில் இருந்து 8கலசங்கள் திருட்டுப்பானது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.