காய்ச்சலால் பாதிக்கப்பட்ட இளம்பெண் சாவு

காய்ச்சலால் பாதிக்கப்பட்ட இளம்பெண் இறந்தார்.

Update: 2021-08-11 20:03 GMT
செந்துறை:

டெங்கு காய்ச்சல்
அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே பிலாக்குறிச்சி கிராமத்தில் உள்ள மேலத்தெருவில் பலருக்கு அடுத்தடுத்து மர்ம காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அங்கு விரைந்து சென்ற மருத்துவ குழுவினர் பரிசோதனை செய்து பார்த்ததில் 11 பேருக்கு டெங்கு காய்ச்சலும், 3 பேருக்கும்‌ கொரோனா தொற்றும் ஏற்பட்டுள்ளது தெரியவந்தது. இதனையடுத்து சுகாதார துறையினர் அந்த கிராமத்தில் உள்ளவர்களுக்கு காய்ச்சல் மற்றும் கொரோனா பரிசோதனை மேற்கொண்டனர்.
மேலும் அப்பகுதியில் செந்துறை‌ வட்டார மருத்துவ அலுவலர் ரேவதி தலைமையில் 30 பேர் கொண்ட மருத்துவகுழுவினர் முகாமிட்டு வீடு, வீடாக சென்று கண்காணித்து வருகின்றனர். மேலும் செந்துறை தாசில்தார் குமரய்யா, வட்டார வளர்ச்சி அலுவலர் சந்தானம் உள்ளிட்டோர் வீடு, வீடாக சென்று தண்ணீர் தேங்கியுள்ளதா என கண்டறிந்து அதனை சீர்படுத்தி வருகின்றனர்.
பெண் சாவு
இந்த நிலையில் சென்னை அருகே உள்ள கார் உதிரி பாகங்கள் தயாரிக்கும் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த பிலாக்குறிச்சி கிராமத்தை சேர்ந்த நிவேதா(வயது 23), மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டு அரியலூர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து தகவல் அறிந்த சுகாதார துறையினர் நிவேதா டெங்கு காய்ச்சலால் இறந்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது விசாரணை நடத்தி வருகின்றனர். மர்ம காய்ச்சலால் இளம்பெண் இறந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்