பெருமாள் கோவில்களில் ஆடிப்பூர விழா
பெருமாள் கோவில்களில் ஆடிப்பூர விழா நடைபெற்றது.
பெரம்பலூர்:
ஆடிப்பூர விழா
பெரம்பலூரில் உள்ள மரகதவல்லி தாயார் சமேத மதனகோபாலசுவாமி கோவிலில் ஆண்டாள் சன்னதியில் பன்னிரு ஆழ்வார்களில் ஒருவரான சூடிக்கொடுத்த சுடர்கொடி ஆண்டாள் நாச்சியார் அவதரித்த ஆடிப்பூர நட்சத்திரத்தை ஒட்டி ஆடிப்பூர விழா நேற்று நடைபெற்றது. ஆடிப்பூர உற்சவத்தை முன்னிட்டு பால், சந்தனம், இளநீர், பன்னீர் மற்றும் வாசனை திரவியங்களை கொண்டு ஆண்டாளுக்கு திருமஞ்சன உற்சவமும், மங்கள மகா ஆரத்தியும் நடந்தது.
கொரோனா ஊரடங்கையொட்டி பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கட்டளைதாரர்கள் குப்புசாமி செட்டியார், மனோகரன் ஆகியோர் செய்திருந்தனர்.
வளையல்களால் மாலை
இதேபோல பெரம்பலூரை அடுத்த வாலிகண்டபுரத்தில் உள்ள பிரசன்ன வெங்கடாஜலபதி கோவிலில் மூலவர்-பத்மாவதிதாயார் மற்றும் ஆண்டாள் நாச்சியாருக்கு திருமஞ்சன உற்சவம் நடந்தது. ஆண்டள் நாச்சியாருக்கு வளையல்களால் மாலை அணிவிக்கப்பட்டு மங்கள மகா ஆரத்தி நடந்தது.
திருமஞ்சனம் மற்றும் ஆராதனையை கோவில் அர்ச்சகர் கோகுல் பட்டாச்சாரியார் நடத்தினார். விழாவிற்கனா ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் அகிலா மற்றும் வாலிகண்டபுரம் மற்றும் சுற்றுப்புற பகுதியைச் சேர்ந்த ஆண்டாள் பக்தர்கள், சேவார்த்திகள் செய்திருந்தனர்.