காபி விளைச்சல் அதிகரிப்பு
கூடலூர் பகுதியில் காபி விளைச்சல் அதிகரித்து உள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
கூடலூர்,
நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதியில் ஆண்டுதோறும் சுமார் 6 மாதங்கள் தென்மேற்கு, வடகிழக்கு பருவமழைகள் பெய்வது வழக்கம். இதை பயன்படுத்தி விவசாயிகள் பல்வேறு பயிர்களை சாகுபடி செய்து வருகின்றனர். அதன்படி பணப்பயிரான காபி, ஏலக்காய், கிராம்பு, இஞ்சி போன்றவை விளைவிக்கப்படுகிறது. குறிப்பாக காபி பயிரில் அரபிக்கா, ரொபஸ்டா ஆகிய 2 வகை பயிரிடப்படுகிறது.
வழக்கமாக மே மாதம் கோடை மழையை தொடர்ந்து காபி செடிகள் பூக்க தொடங்கிவிடும். அதன்பிறகு ஜூன் மாதம் தொடங்கி பெய்யும் தென்மேற்கு பருவமழையை தொடர்ந்து காபி விளைச்சல் இருக்கும். பின்னர் டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் காபி அறுவடை சீசன் தொடங்கும்.
லாபம் கிடைக்கும்
இந்த நிலையில் கூடலூர், பந்தலூர் தாலுகாக்களில் தற்போது பரவலாக மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பூத்துக்குலுங்கிய காபி செடிகளில் காய் பிடிக்க தொடங்கி உள்ளது. மேலும் விளைச்சலும் அதிகரித்து வருகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
இதுகுறித்து விவசாயிகள் கூறும்போது, கூடலூர் பகுதியில் பருவமழை தாமதமாக பெய்தது. எனினும் தற்போது பரவலாக பெய்து வருகிறது. இது காபி செடிகளுக்கு உகந்ததாக உள்ளது. இதன் மூலம் காபி விளைச்சல் அதிகரித்து இருக்கிறது. இதனால் காபி பயிரிட்ட விவசாயிகளுக்கு கணிசமான லாபம் கிடைக்க வாய்ப்பு உள்ளது என்றனர்.