தேனி, திண்டுக்கல்லை சேர்ந்த 1,781 பேர் தேர்ச்சி
போலீஸ் பணிக்கான உடல் தகுதி தேர்வில் தேனி, திண்டுக்கல்லை சேர்ந்த 1,781 பேர் தேர்ச்சி பெற்றனர்.
திண்டுக்கல்:
உடல் தகுதி தேர்வு
தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் மூலம் இரண்டாம் நிலை போலீசார், சிறைக்காவலர், தீயணைப்பு வீரர் ஆகிய பணிகளுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். இதற்காக நடத்தப்பட்ட எழுத்து தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு கடந்த மாதம் 26-ந்தேதி உடல் தகுதி தேர்வு தொடங்கியது. அதன்படி தேனி, திண்டுக்கல் மாவட்டங்களை சேர்ந்தவர்களுக்கு, திண்டுக்கல் சீலப்பாடி ஆயுதப்படை மைதானத்தில் உடல் தகுதி தேர்வு நடைபெற்றது.
இதில் திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த 1,547 ஆண்கள் மற்றும் 553 பெண்கள், தேனி மாவட்டத்தை சேர்ந்த 1,259 ஆண்கள் மற்றும் 333 பெண்கள் என மொத்தம் 3 ஆயிரத்து 692 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. மேலும் கொரோனா விதிகளை பின்பற்றி தினமும் 500 பேர் வீதம் உடல் தகுதி தேர்வு நடந்தது. அதிலும் கொரோனா பரிசோதனை செய்து தொற்று இல்லை என்று சான்றிதழ் கொண்டு வந்தவர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர்.
1,781 பேர் தேர்ச்சி
மேலும் 26-ந்தேதி முதல் 4-ந்தேதி வரை முதல்கட்ட உடல்தகுதி தேர்வும், அதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு 5-ந்தேதி முதல் 2-வது கட்ட உடல் தகுதி தேர்வும் நடைபெற்றது. அந்த வகையில் நேற்று திண்டுக்கல், தேனியை சேர்ந்த பெண்களுக்கு 2-வது கட்ட உடல் தகுதி தேர்வு நடந்தது. இதில் உயரம், நீளம் தாண்டுதல், குண்டு எறிதல் உள்ளிட்ட போட்டிகள் நடந்தன. இவற்றில் பெண்கள் ஆர்வமுடன் பங்கேற்று அசத்தினர்.
அதிலும் நீளம் தாண்டுதல் போட்டியில் அதிகமானோர் ஆர்வம் காட்டியது குறிப்பிடத்தக்கது. இறுதியில் 2 மாவட்டங்களை சேர்ந்த 252 பேர் தேர்ச்சி பெற்றனர். ஏற்கனவே 2 மாவட்டங்களை சேர்ந்த 1,529 ஆண்கள் தேர்ச்சி பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. இதன்மூலம் தேனி, திண்டுக்கல்லை சேர்ந்த 1,781 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.