நிச்சயிக்கப்பட்ட திருமணத்திற்கு காதலன் திடீரென மறுத்ததால் போலீஸ் நிலையம் முன்பு தாயாருடன் மாணவி தர்ணா
நிச்சயிக்கப்பட்ட திருமணத்திற்கு காதலன் திடீரென மறுத்ததால், விருத்தாசலம் போலீஸ் நிலையம் முன்பு தாயாருடன் மாணவி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
விருத்தாசலம்,
விருத்தாசலம் ஒன்றியத்துக்குட்பட்ட முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரின் மகன் 19 வயதுடைய வாலிபர். இவரும் அதே பகுதியை சேர்ந்த டிப்ளமோ நர்சிங் படித்து வரும் 19 வயதுடைய மாணவி ஒருவரும் காதலித்து வந்தனர். இந்த நிலையில் அவ்வப்போது திருமண ஆசை வார்த்தை கூறி, மாணவியுடன் வாலிபர் உல்லாசம் அனுபவித்து வந்துள்ளார். இதில் அந்த மாணவி கர்ப்பமானதாக கூறப்படுகிறது. இதையடுத்து மாணவி கர்ப்பமான தகவலை காதலனிடம் தெரிவித்துள்ளார். அப்போது அவர் கர்ப்பத்தை கலைத்து விடு என்று கூறி கர்ப்பம் கலைவதற்கான மாத்திரைகளை மாணவிக்கு வாங்கி கொடுத்துள்ளார். அந்த மாத்திரையை சாப்பிட்ட மாணவிக்கு கர்ப்பம் கலைந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் இந்த சம்பவம் குறித்து மாணவி தனது பெற்றோரிடம் தெரிவித்தார். பின்னர் இதுகுறித்து மாணவியின் பெற்றோர், வாலிபரின் உறவினர்களிடம் சென்று கேட்டபோது அவர்கள் ஆபாசமாக திட்டி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.
நிச்சயதார்த்தம்
இதையடுத்து ஊர் முக்கியஸ்தர்கள் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடைபெற்று, விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் காதலர்கள் இருவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இருவருக்கும் திருமணம் நடக்கவிருந்த நிலையில், அந்த வாலிபர் திருமணம் செய்ய மறுப்பு தெரிவித்துவிட்டு தலைமறைவானதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து மாணவி, விருத்தாசலம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். ஆனால் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என தெரிகிறது.
தீக்குளிக்க முயற்சி
இதனால் ஆத்திரமடைந்த மாணவி, நேற்று தனது தாயாருடன், விருத்தாசலம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையம் முன்பு திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். அப்போது தனது காதலனை தன்னுடன் சேர்த்து வைக்கக்கோரி கதறி அழுதார்.
தொடர்ந்து அவர் திடீரென தான் மறைத்து வைத்திருந்த மண்எண்ணெயை எடுத்து தன் மீது ஊற்றி தீக்குளிக்க முயன்றார். இதைபார்த்த போலீசார் விரைந்து வந்து அவரிடம் இருந்த மண்எண்ணெய் கேனை பிடுங்கி அவர் மீது தண்ணீரை ஊற்றினர். பின்னர் அவரையும், அவருடைய தாயாரையும் போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.
தனது காதலனை தன்னுடன் சேர்த்து வைக்கக்கோரி இளம்பெண் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.