ஆடிப்பூரத்தை முன்னிட்டு கடலூர் மாவட்டத்தில் உள்ள 1,640 கோவில்கள் மூடல்
ஆடிப்பூரத்தை முன்னிட்டு கடலூர் மாவட்டத்தில் உள்ள 1,640 கோவில்களும் மூடப்பட்டன. மேலும் பக்தர்கள் இன்றி சிறப்பு பூஜை நடைபெற்றது.
கடலூர்,
கொரோனா 3-வது அலை பரவலை தொடக்கத்திலேயே கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக கடலூர் மாவட்டத்தில் உள்ள கோவில்களில் கடந்த 1, 2, 3 மற்றும் 8-ந் தேதிகளில் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதி கிடையாது என மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டது. அதன்படி மாவட்டத்தில் உள்ள 1,640 கோவில்களும் மூடப்பட்டன. பின்னர் பக்தர்கள் இன்றி எளிய முறையில் சாமிக்கு சிறப்பு வழிபாடு மட்டும் வழக்கம்போல் நடந்தது.
இந்த நிலையில் ஆடி மாதத்தில் வரும் பூர நட்சத்திரத்தில் கொண்டாடப்படும், ஆடிப்பூர விழா நேற்று நடைபெற்றது. இதையொட்டி பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்காக நேற்று காலையில் தங்கள் பகுதிகளில் உள்ள கோவில்களுக்கு திரண்டு சென்றனர்.
கோவில்கள் மூடல்
ஆனால் ஆடிப்பூரத்தையொட்டி கோவில்களில் அதிகளவில் பக்தர்கள் கூடினால், கொரோனா பரவலுக்கு வழிவகுக்கும் என்பதால் கோவில்களை மூட மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியது. இதனால் மாவட்டத்தில் உள்ள 1,640 கோவில்களும் நேற்று காலை திடீரென மூடப்பட்டன.
இதனால் காலையிலேயே தரிசனம் செய்ய வந்த பக்தர்கள், ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். சிலர் கோவில் முன்பு நின்று கோபுர தரிசனம் செய்து விட்டு சென்றனர். அந்த வகையில் கடலூர் திருப்பாதிரிப்புலியூர் பாடலீஸ்வரர் கோவிலும் ஆடிப்பூரத்தையொட்டி நேற்று மூடப்பட்டது. ஆனால் பக்தர்கள் இன்றி சாமிக்கு சிறப்பு பூஜை நடந்தது.
தமிழக அரசின் உத்தரவுபடி நாளை (வெள்ளிக்கிழமை) முதல் 3 நாட்கள் மாவட்டத்தில் உள்ள அனைத்து கோவில்களிலும் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதி கிடையாது என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.